போதைப் பொருள் விநியோகம் – இருவர் கைது

போதைப் பொருள்களை விநியோகம் செய்து வந்த உள்ளூர் ஆடவர் ஒருவர் உட்பட அந்நிய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23 ஆயிரம் வெள்ளி பெருமானமுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 17ஆம் தேதி இரவு 8 மணியளவில் கோலாலம்பூர் போதைப் பொருள், குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஜாலான் கோம்பாக்கில் வீட்டின் பின்புறத்தில் இருந்த உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று  கோலாலம்பூர் போதைப் பொருள், குற்றத் தடுப்பு பிரிவின் தலைவர் எசிபி அட்னான் பின் அஸிசோன் கூறினார்.
38 வயது நிரம்பிய அந்த ஆடவரிடமிருந்து 45.43 கிராம் ஹெரோயின், 2.61 கிராம் மெத்தாம்பெத்தமின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆடவர் மீது 5 போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பதிவாகியுள்ளன. அதோடு இரு குற்றச் செயல் பதிவுகளும் உள்ளன. அதோடு போலீசாரின் விசாரணையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பதும் தெரிய வந்தது. மேல் விசாரணைக்காக அவர் 5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாடவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் டானாவ் கோத்தாவில் மியன்மாரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 220.65 கிராம் ஹெரோயின், 67.78 கிராம் மெத்தாம்பெத்தமின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆடவர் மீது அதிகமான போதைப் பொருள் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவரும் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் மேல் விசாரணைக்காக 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று எசிபி அட்னான் கூறினார்.
இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் 23,863 வெள்ளி பெருமானமுள்ளவை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் 290 வெள்ளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here