இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கி இரவு 12 மணி அளவில் நிறைவு அடைந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த தகவல்களும் தற்போதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் உள்ள லடாக்கின் லே பகுதியை இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று பார்வையிட உள்ளார். எல்லையின் பாதுகாப்பு மற்றும் களநிலவரம் குறித்து அவர் ஆய்வு செய்ய உள்ளார். சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே லடாக் எல்லையில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது