முருங்கை மரத்தில் வேதாளம்!

சினி சிக்கனமான பெயர். இங்குதான் ஜூலை மாதம் 4ஆம்நாள்  இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் போட்டியாக இருந்தாலும் போட்டியிடுகின்றவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு  (பாரிசான் நேஷனல்) வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மலேசியத் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடலாம். ஆனால், வெற்றி என்பது வெங்காயமாகத்தான் இருக்கும்.

சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது குதிரைக்கொம்பு என்றாலும் பொருந்தும் . இதைவிடக்கொடுமை வைப்புத்தொகை இழப்பு என்பதுதான். சுயேட்சை வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழப்பதுதான் இதுவரை அதிகமாக இருந்திருக்கிறது.

வைப்புத்தொகையை யாரேனும் கொடுத்து, சுயேட்சையாகப் போட்டியிடச்செய்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கும். அது தேநீர் வாங்கிக்கொடுத்த செலவு போலவும் இருக்கும். ஏதொ ஒன்று காரணமாகவும்  இருக்கலாம், அப்படியிருந்தால் அது நிழல்யுத்தம்.

காரணமில்லாமல் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். ஒரே நிறுவனம் ஒரே பொருளை வெவ்வேறு பெயரின் தயாரிப்பார்கள். அது வணிகத்தந்திரம். எதிர் நிறுவனங்கள் போட்டியாக அப்பொருளைத் தயாரிப்பதை தடுக்கக் கையாளும் உத்தி அது.

அதுபோலத்தான் ஒரே கட்சி, எதிர்ப்பு என்ற ஒன்றை உருவாக்கச் செய்யும் தந்திரமாகவும் இத்தேர்தல் இருக்கலாம். அதனால்தாம் மும்முனைப்போட்டியா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன ? என்ன என்பதிலும் சிக்கல் இருக்கிறது. ஆளும் கட்சி, அல்லது தோழமைக் கட்சி வென்றால் சில காரியங்களை விரைவாகச்செய்ய முடியும்.

அந்த வகையில் இப்போதைய ஆட்சிக்கு தோழமைக் கட்சியாக பாரிசான் நேஷனல் இருக்கிறதுபோல் தோற்றம் நிலவுகிறது. அதனால் வெற்றிக்குப்பின் சில நல்ல கரியங்களைச் செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

சினி மக்கள் எதை எதிர்ப்பார்க்கின்றனர்? வேலை வாய்ப்புகள் வேண்டும். மேம்பாடு காணவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் சினி மக்கள் எதிர்பார்ப்பெல்லாம் வேலை வாய்ப்பு, மேம்பாடு என்றுதான் இருக்கிறதென்றால் இதற்குமுன் தேசிய முன்னணி என்னதான் செய்துகொண்டிருந்தது என்று கேட்பதும் நியாயம்தானே!

இருந்தாலும் மக்கள் எதையும் எளிதில் மறந்துவிடக்கூடியவர்கள் என்பதால், முன்னாள் தேசிய முன்னணி செய்த தவற்றினையும் மறந்துதான் போவார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி வீர வசனம் பேசத்தொடங்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here