கொரோனா தொற்று அடங்கியிருக்கிறது. அது நிரந்தரம் என்று கருதிவிட முடியாது, ஆனால், அது விட்டுச்சென்ற அடையாளங்கள் அதிகம்.
ஜூன் 24 ஆம் நாள் அறிவிப்புக்குப்பின் கிடைத்த தகவல்படி 400,000 குழந்தைகள் மனப்பாதிப்பில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தொற்றின் காரணத்தால் பள்ளி விடுமுறை, தனித்து விடப்பட்டதன் விளைவு அதிகம். பள்ளி விடுமுறைக்கும், தொற்றின் காரணமாய் அமைந்த விடுமுறைக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றன.
பள்ளிவிடுமுறை என்பது உல்லாசமானது. கொரோனா விடுமுறை என்பது தண்டனைபோன்றது. உல்லாசத்திற்கு மகிழ்ச்சி துணையாக இருக்கும். மகிழ்ச்சிக்குரியவர்கள் பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு மனப்பாதிப்பு என்பது இருக்காது.
ஆனால், 400,000 குழந்தைகள் மனப்பாதிப்பில் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வாமை இருக்கிறது என்பதாகவே கருத்தப்படும். அது எது?
இந்த பாதிப்புகள் சாதாரணம் என்றும் சொல்வதற்கில்லை. போதைப் பழக்கத்திற்கும் தற்கொலைக்கும் கூட இட்டுச்செல்லும் தன்மையை ஏற்படுத்திவிடும்.
மருத்துவர்களைவிட பெற்றோர்களே முதல் மருத்துவர்களாகச் செயல்படவேண்டும் என்பதுதான் நீண்ட ஆலோசனையாக இருந்துவருகிறது.
நம்நாட்டில் குழந்தைகள் அதிக மனஇறுக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களை மீட்பது தலையாயக் கடமைகளில் ஒன்றாகவும் முதன்மையாகவும் இருக்கிறது.
பெற்றோர் துணையின்றி ஏதும் நடக்காது. மனநலப்பாதிப்பு மருந்தால் குணமாகாது அதற்கு மனம்தான் மருந்தாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் அரவணைப்பு இருந்தால்தான் மருந்து பயன்படும். மருந்தால் தனியாக இயங்க முடியாது.
மூன்று மாதங்களுக்கு மேலாக குழந்தைகள் மாறுபட்ட சூழலில்தான் இருந்தார்கள். அதலால் அவர்களின் நடைமுறை, பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறுபட்டிருக்கும். அவர்களுக்கு இறுக்கமான பேச்சு, செயல்கள், உதாசீனம் எல்லாம் இறுக்கத்தை அதிகரிக்கும்.
பிள்ளைகளின் நடத்தை மாறுதல். குணம். பேச்சு, தனிமை விளையாட்டு என்றெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடமே இருக்கிறது.
பிள்ளைகளை தனிப்படுத்துவது சிறந்த செயலாகவும் இருக்க முடியாது. தனிமையே அதிக இறுக்கத்திற்கு ஆளாக்கிவிடும். கண்காணிப்பு மிக அவசியம். ஆரம்பத்திலேயே இறுக்கதிற்கு அரவணைப்பு தேவை.