உலகிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் அதிகளவில் நடக்கின்றன. ஓர் ஆண்டடில் சுமார் 1.50 லட்சம் உயிர்களை இந்திய சாலைகள் காவு வாங்கி வருகின்றன.
வாகன ஓட்டிகளின் அலட்சியம் பொறுப்பற்றத் தன்மை ஆகியவைதான், சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த அலட்சியமே சாலை விபத்துக்களுக்கு அடித்தளமாக அமைகிறது.
குடிபோதையில் வாகனங்களை இயக்கும் பழக்கம் இங்கு பலரிடம் காணப்படுகிறது. அதேபோல் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதை அலட்சியப்படுத்துபவர்களும் இங்கு ஏராளம். இப்படிப்பட்ட நபர்களை திருத்தி, சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த எண்ணத்தை, கொரோனா வைரஸ் ஊரடங்கு நிறைவேற்றியுள்ளது. எந்தவொரு தீமைக்குள்ளும் சிறு நன்மை இருக்கும் என்பதை இது நிரூபிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
ஆம், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, சாலை விபத்துக்களில் இருந்து சுமார் 9,000 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. அதே சமயம் 26,000 பேர் சாலை விபத்துக்களில், படுகாயம் அடைவது தடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கியதே இதற்கு முக்கியமான காரணம்.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா தொற்று ஊரடங்கால், சாலை விபத்துகள் தொடர்பான மரணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஆனால், கொரோனா தொற்றுப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், வாகன போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போது வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே சாலை விபத்து மரணங்களை இன்னும் வெகுவாக குறைக்க முடியும்.