தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ‘பெரும்பான்மை’ இழுபறிக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான 118ஐ தாண்ட முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்த தவெக, தற்போது இந்த கட்சிகளின் தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 120 உறுப்பினர்களின் பலத்துடன் அசைக்க முடியாத பெரும்பான்மையை எட்டியுள்ளது. இதன் மூலம், ‘ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் பட்டியலுக்கு பிடிவாதம் காட்டி வந்த ஆளுநர் அர்லேகரின் நிபந்தனை நிறைவேறியிருக்கிறது.
இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “ஜனநாயகம் காக்கப்படும், தமிழக மக்களின் ஆதரவுடன் எங்கள் தலைவர் முதல்வராகப் பதவியேற்பார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதிய அரசுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து முட்டுக்கட்டைகளையும் தகர்த்து, 120 எம்.எல்.ஏக்களின் பலத்துடன் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அரியணை ஏறும் விஜய்யின் புதிய ஆட்சியில் தமிழகம் ஒரு புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கிறது.





















