எம்எம்ஏ – ஷோப்பி முயற்சியில் முன்னணி பணியாளர்களுக்கு உதவ 6 லட்சத்து 99 ஆயிரம் வெள்ளி நிதி

கோவிட் 19 நோய் தொற்று காலக் கட்டத்தில் அயராது உழைத்த முன்னணி பணியாளர்களுக்கு உதவும் வகையில் 6 லட்சத்து 99 ஆயிரம் வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஷோப்பி எனப்படும் பலசரக்கு வியாபார அமைப்பும் எம்எம்ஏ எனப்படும் மலேசிய மருத்துவர் சங்கமும் இணைந்து இந்த தொகையை திரட்டியதாக அதன் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

முன்னணி பணியாளர்களில் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அதோடு பல்வேறு ரீதியில் உதவிகள் தேவைப்படுபவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவிகளை வழங்கும் நல்ல நோக்கத்தில் எம்எம்எ – ஷோப்பி இணைந்து 6 லட்சத்து 99 ஆயிரம் வெள்ளி நிதியை திரட்டியதாக அவர் கூறினார்.

இந்த நிதி எம்எம்எ அமைப்பின் கீழ் இருக்கும். முன்னணி பணியாளர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று நேற்று எம்எம்எ தலைமையகத்தில் நடைபெற்ற நிதி அறிமுக விழாவில் ஞானபாஸ்கரன் கூறினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட சுகாதார துறை துணையமைச்சர் டாக்டர் நோர் அஸ்மி கூறுகையில் எம்எம்எ மற்றும் ஷோப்பியின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் என்றார். முன்னணி பணியாளர்களின் தியாகங்கள் அளப்பரியது. அவர்களுள் ஏராளமானோருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு உதவிகளை வழங்க இவ்விரு அமைப்புகள் முன்வந்துள்ளன.

இதனிடையே, ஜூலை 1 முதல் பாலர் பள்ளிகள் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பாலர் பள்ளியில் எஸ்ஓபிகள் எந்தளவிற்கு கடைபிடிக்கப்படும் என்று அவரிடம் கேட்ட போது, பிள்ளைகளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். மழலையர்கள் மத்தியில் கூடல் இடைவெளி பயிற்சி படுத்துவது சாதாரணமான விஷயம் அல்ல. இருந்தாலும் பிள்ளைகளுக்கு இது குறித்து கற்றுக் கொடுப்பது பெற்றோரின் தலையாய கடமையாக உள்ளது என்று அவர் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here