லோபாக் வட்டரத்தில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதியாக திகழும் லோபாக் அடுக்குமாடி வீடு கட்டடம் தற்போது புதிய தோற்றத்தில் அழகுப்படுத்தும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிங் சே யோங் கூறினார்.
பழடைந்து மிக மோசமான நிலையில், குப்பைக்கூலங்களாக சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த இச்சூழல் குறித்து கடந்தாண்டு மக்கள் ஓசையில் செய்தியாக வெளி வந்திருந்த்தை தொடர்ந்து, இப்பகுதியை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கையில் சீவ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
அந்நடவடிக்கைகளுக்கான நிதி உதவியை கேட்டு மாநில அரசாங்கத்துக்கு முன்னதாக விண்ணப்பம் ஒன்று அவர் செய்திருந்த்தை தொடர்ந்து, அந்நிதி அங்கீகரிக்கப்பட்டு, தற்போது இந்த அடுக்குமாடி வீட்டுக்கு புதிய அழகான தோற்றத்தை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் உடைந்து குப்பை கூலங்களாக அவல நிலையில் கிடந்த காலி வீடுகள் யாவும், சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவ்வீடுகள் புதுப்பிக்கப்பட்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இங்கு அதிகமாக ஏழை குடும்பங்கள் வாடகைக்கு குடியேறி வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்வாதார போராட்டத்தை மையமாக கொண்டு வாழும் இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசாங்கம் மூலமாக சமுக நல உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அப்பகுதிக்கு வருகை தந்த சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குணா ஆகியோருக்கு அங்கு மேற்கொள்ளப்படும் மறுசீரஅமைப்பு பணிகள் குறித்து சிங் விளக்கமளித்தார்.
– நாகேந்திரன் வேலாயுதம்