நம்மை நாம் அங்கு தேடலாம்

எஸ் ஓ பி வழமை மக்களின் மனமாற்றத்திற்கு புதிய தூண்டுகோளாக அமைந்திருக்கிறது என்பது வெளிப்படையாகி இருக்கிறது. மக்களின் வெளி நடமாட்டம் அதைத் தெளிவாகக்காட்டுகிறது.

தூங்கா நகரம் என்ற திரைப்படப்பெயருக்கு ஏற்ப இயங்கிக்கொண்டிருந்த கோலாலம்பூரின் மையயப்பகுதிதான் தங்க முக்கோணம் என்று சிறப்பாக அழைக்கபட்டு வந்தது. அதன்  மலேசியப் பெயர் புக்கிட் பிந்தாங்.

புக்கிட் பிந்தாங் என்றால் என்ன ? குன்றின் மீது நட்சத்திரம் என்பதுவா? இப்படிச் சொன்னால் அது மிகையானதல்ல. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. யாராவது விளக்கம் சொன்னால் கேட்பதற்கும் தயார். இந்த பெயர் ஏற்பட ஒரு அழுத்தான காரணம் இல்லாமல் இருக்காது. அதைக்கொண்டு பெயர் வைத்தவர்கள் நிச்சயம் முன்னோக்குச் சிந்தனையாளர்களாகத்தான் இருப்பார்கள் .

சற்றே உயர்ந்த இடத்தில், 24 மணிநேரம் மக்கள் நடமாட்டம் குறையாமல், இரவிலும் ஒளிக்கதிர் ஜாலங்களால் புன்னகை சிந்தும் இடமாக புக்கிட் பிந்தாங் அமையும் என்று அன்றே பெயர்வைத்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாலும் தகும்.

உயர்ந்த விடுதிகளில் வெளிநாட்டினர்கள் இருப்பும், நடமாட்டமும் அமெரிக்காவில் இருப்பதுபோல், விடுமுறை இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் தலைநகரின் ஒருபகுதிதான் புக்கிட் பிந்தாங்.

கேளுங்கள் தரப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பரிட்சியமான வார்த்தை.அதன் அர்த்தத்தைப்போலவே வருகையாளர்களின் தேவைக்கு இதைவிடசிறந்த இடம் இருக்கவே முடியாது.

சூத்தி சூத்தி மலேசியா ( Cuti cuti Malaysia) என்பது மலேசிய சுற்றுலாவுக்கான வார்த்தை. இதை தமிழர்கள் சுத்தி சுத்தி வாருங்கள் என்று கூறுவதிலும் ஓர் அழகு இருக்கிறது. இந்த வார்த்தைக்கு மகுடம் சூட்டும் இடமாக விளங்கி வருகிறது புக்கிட் பிந்தாங் என்பது மிகையான வார்த்தை தானே!

மாலை வேளையில் பிள்ளைகள், பெரியவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு நகர்வலம் வருவதற்கு புக்கிட் பிந்தாங் ஒரு சொர்க்க பூமி என்றால் வெறும் வாத்தைக்குச் சொன்னதாக இருக்காது.

நகர்வலமாக ஒரு சுற்று வந்தவர்களைக்கேட்டால் தான் தெரியும். இல்லையென்றால் ஒரு நகர்வலத்திற்கும் ஏற்பாடு செய்யலாம். நகர் வலத்திற்கு எந்த செலவும் ஏற்படாது. ஒரு மணி நேரம் போதும். சுற்றி வருவதே சுகம் என்பதை உணரமுடியும்.

வசதி உள்ளவர்கள் பணப்பை கனத்திற்கு ஏற்ப இறங்கி நடைபயிலலாம். குழந்தைகள் உற்சாகத்தின் எல்லைக்கே போய்விடுவார்கள். ஆனாலும் கொஞ்சம் செலவாகுமே!

பரவாயில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்! பெரிசுகள் ஆச்சரியமாகப் பார்க்கும் இடங்களும் இருக்கின்றன. கால்வலி கைவலி என்று கூறும் பெரிசுகளுக்கு தெருவோர கால் நீவிவிடவும் இடம் இருக்கிறது. நடைப்பாதையிலேயே சின்ன செலவில் இதைச்செய்துகொள்ளும் பெரிசுகளுக்கு புது அனுபவமாக இருக்கும். ஆனாலும், அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் கொஞ்சமாய் வெட்கப்படுவதாகவும் இருக்கும்.

தெருவோர உணவு வகைகள் எச்சில் ஊறவைக்கும். பிள்ளைகள் நிச்சயம் விடமாட்டார்கள். அவர்களுக்கான அயிட்டங்களில் அவர்களே மீண்டுவருவது சுலபமான காரியமல்ல. பர்சை வெளியே எடுகத்தான் வேண்டிவரும். ஒருநாளைக்குத்தானே என்று மனத்தை தேற்றிக்கொள்ளத்தான் வேண்டும். வெறு வழியே இல்லை.

இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியாமல் தடுத்துவிட்ட கொரோனாவுக்குத் தேவைபட்டன் நூறு நாட்கள். சொர்க்க பூமியின் சுகமான அனுபவத்தைக் கட்டிப்போட்டதில், இரவு 12மணிக்குள் அனைத்தும் மூடும்படியாகிவிட்டதில் ஏகப்பட்டவர்களுக்கு டன் கணக்கில் வருத்தம் இருக்கிறது.

ஆனாலும் வேறு வழியில்லை. பொறுமையும் கூடல் இடைவெளி கட்டுப்பாட்டையும் எஸ் ஓ பி தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இது மாற்றம் அல்ல. புதிய நடைமுறைச் சூழல்.

மீண்டும் புக்கிட் பிந்தாங் நட்சத்திரமாய் மின்னும். காத்திருப்போம். அப்போது நாம் அங்கே சந்திக்கலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here