சிப்பாங்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-இல் (Terminal 1) தகராறில் ஈடுபட்டு ரகளை செய்த 25 வயதுடைய இந்தோனேசிய நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஜூலை 27) இச்சம்பவம் நடைபெற்றதாகக் KLIA மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ரவி முனுசாமி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவிற்குச் செல்லவிருந்த தனது விமானப் பயணம் சுமார் 5 மணி நேரம் தாமதமானதால், அந்தச் சந்தேக நபர் ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அங்கிருந்த விமான நிறுவனப் பணியாளர்களை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, முனையம் 1-இல் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கேயும் அவர் கட்டுப்பாட்டை இழந்து, அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் ஆக்ரோஷமாகவும் வரம்பு மீறியும் நடந்துகொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, KLIA துணைப் போலிசாரால் (Auxiliary Police) மடக்கிப் பிடிக்கப்பட்ட அவர், மேல் விசாரணைக்காகக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 25 வயதுடைய அந்த இந்தோனேசிய நபர் மீது விசாரணை நடத்துவதற்காக 4 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





















