கடந்த மே 21ஆம் தேதி போலீசார் மற்றும் தபால் நிலைய அதிகாரிகளாக நடித்து தொலைப்பேசியின் மூலம் 51 வயது பெண்மணியிடம் ஒரு கும்பல் 695,660.68 வெள்ளி வரை மோசடி செய்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அப்பெண்மணியிடம் தாம் தபால் நிலைய அதிகாரி என்று கூறிய ஒரு நபர், அவரின் பெயரில் உள்ள அடையாள அட்டை, வங்கிக் கார்டுகள் கோலாலம்பூரிலிருந்து சபாவிற்கு அனுபப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
அப்படி ஒரு பார்சலை தாம் அனுப்பவில்லை என அப்பெண்மணி கூறியுள்ளார். பின்னர் தம்மை கோத்தா கினாபாலு காவல் நிலைய அதிகாரி என கூறிக் கொண்ட ஒரு நபர் நீங்கள் கள்ளப் பண பறிமாற்ற குற்றத்தில் ஈடுப்பட்டிருப்பதாக அப்பெண்மணியிடம் பேசியிருக்கிறார்.
மீண்டும், அப்பெண்மணிக்கு +87088454222 என்ற எண்ணிலிருந்து தொடர்புக் கொண்டே அதே நபர் அவர் மீது பல்வேறு குற்றப் பதிவுகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பெண்மணி அவர் சொல்லும் அனைத்தையும் செய்திருகிறார்.
மே 21ஆம் தேதி தொடங்கி 6 வங்கிக் கணக்குகளில் 38 முறை பணத்தை செலுத்தியிருக்கிறார்.
கடந்த ஜூலை 12ஆம் தேதி இதன் தொடர்பில் தமது கணவரிடம் அப்பெண்மணி உண்மையை கூறியுள்ளார். அதன் பின்னரே தாம் 695,660.68 வெள்ளி ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பெட்டாலிங் ஜெயா காவல் துறை அடிமட்டம் வரை அலசி இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என ஏசிபி நிக் எஸானி கூறினார்.
வயதானவர்கள், மாணவர்கள் ஆகியோரை குறிவைத்து பணம் பறிக்கும் இது போன்ற கும்பல் செயல்படுகின்றனர். யாரையும் நம்பி வங்கிக் கணக்குகளில் தகவல்கள், அடையாள அட்டை, வங்கி அட்டை ஆகியவற்றின் தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இது போன்ற அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும் அவர் கேட்டு கொண்டார்.