3 பச்சிளம் குழந்தைகளுடன் இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்த செவிலியர்

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும்பணியும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டு தனது கையில் பாதுகாப்பாக வைத்திருந்த பெண் செவிலியரின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெய்ரூட் விபத்து நடந்த சில நிமிடங்களில் உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் தனது கேமராவை எடுத்துக்கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காக அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்றார்.
அங்கு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுத்துவிட்டு அம்மாவட்டத்தில் உள்ள அல் ரோவ்ம் மருத்துவமனைக்கு சென்றார்.
வெடிவிபத்து காரணமாக அந்த மருத்துவமனையே நிலைகுலைந்திருந்தது. மருத்துவமனையின் 80 சதவிகித கட்டிடம் பெருத்த சேதமடைந்திருந்தது.
மருத்துவமனைக்குள் சென்ற பிலால் அங்கு ஒரு பெண் செவிலியர் தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்.
வெடிவிபத்து காரணமாக அந்த மருத்துவமனை கட்டிடம் இடிந்து 4 செவிலியர்கள், 12 நோயாளிகள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருந்தனர். வெடிவிபத்தில் காயமடைந்த பலரும் ரத்தக்காயங்களுடன் அந்த செவிலியரை சுற்றியிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடலும் அந்த செவிலியரை சுற்றிக்கிடந்தது. ஆனால், அந்த செவிலியர் தனது கையில் உள்ள குழந்தைகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தோடும், மன உறுதியோடும் அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு உதவிபெற முயற்சித்துக்கொண்டிருந்தார்.
இதைபார்த்த பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக்கொண்டிருந்த அந்த செவிலியரை தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வெடிவிபத்து சம்பவத்தால் மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் அந்த செவிலியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here