கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

பெங்களூரு விதானசவுதாவில் கொரோனா தடுப்பு பணிக்கான செயல்படை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்துவது, ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிப்பது குறித்தும், அதற்கு தேவையான உபகரணங்களை வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கொரோனா பரிசோதனைக்காக ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.1,500 ஆக குறைக்கப்படுகிறது.இனி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களிடம் ரூ.1,500 கட்டணம் பெறப்படும். அதுபோல, தனியார் மருத்துவமனைகளில் தற்போது ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

20 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனைக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சிராலஜி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here