அமைச்சருக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகை?

கோவிட் 19 காரணமாக 14 தனிமைப்படுத்தப்படுவர்கள் வெளியில் சென்றால் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய அமைச்சருக்கு மட்டும் சிறப்புச் சலுகை வழங்கியது ஏன் என்று செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் 72 வயது நிரம்பிய நூர் இமாஸ் முகமட் ஹஷிம் என்பவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை மீறியதற்காக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதோடு அவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும் 8 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரஸாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துர்க்கி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு வந்துள்ளார். ஆனால் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை பின்பற்ற வில்லை. அதோடு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஒரு நியாயம் அமைச்சருக்கு ஒரு நியாயமா? ஏன் அரசாங்கம் பாகுபாடு பார்க்கிறது என்று திரேசா கொக் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாடு திரும்பிய அந்த அமைச்சர் ஜூலை 13ஆம் தேதியிலிருந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் உட்பட பல சந்திப்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். அவரின் இந்தச் செயல் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதா?

ஒருவருக்கு தொடக்கத்தில் கோவிட் பரிசோதனை செய்யும் போது இல்லை என்று காட்டினாலும் சில தினங்களுக்கு பிறகு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகிறது. இதனால் தான் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிக அவசியான ஒன்றாக கருதப்படுகிறது. அது பொதுமக்களாக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி. அனைவரும் எஸ்ஒபியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஜூலை 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அமைச்சர் முகமட் கைருடின் துர்க்கி நாட்டில் இருந்துள்ளார். அந்நேரத்தில் அந்த நாட்டில் கோவிட் 19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 93 பேர் இறந்துள்ளனர். எனவே துர்க்கி பச்சை மண்டல் இல்லாத நாடாக தான் திகழ்கிறது என்ற தகவல்களை திரேசா கொக் தம்முடைய அறிக்கையில் இணைத்திருந்தார்.

மலேசிய பாதுகாப்பு ஆணையம் கைருடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆணையம் யாருக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்காததை இந்த நடவடிக்கை மூலம் நிருபிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here