தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைச் சீண்டாதீர்

பேராசிரியர் இராமசாமி எச்சரிக்கை

நாட்டில் பல்வகை போதனா பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால்தான் மக்கள் பிளவுபட்டிருக்கின்றனர் என்று கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் மக்களவையில் பேசியிருப்பது முற்றிலுமாக அடிப்படையற்றது என்று பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி நேற்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

எதற்கெடுத்தாலும் தாய்மொழிப் பள்ளிகள் மீது பழிபோடுவது சில அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது என அவர் சொன்னார்.
மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கும் ஒற்றுமை பாதிக்கப்படுவதற்கும் மூலக்காரணங்களாக இருப்பவர்கள் இனவாத அரசியல்வாதிகளே தவிர தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

இனவாத அரசியலையும் தீவிரவாதப் போக்கையும் கொண்டிருப்பவர்கள்தாம் இவ்வாறு எதற்கெடுத்தாலும் தாய்மொழிப் பள்ளிகள் மீது குறைகூறி வருகின்றனர் என்று அவர் சாடினார்.

பிரச்சினையைத் திசைதிருப்ப அவர்கள் கையாளும் தந்திரம் இதுவாகும் எனவும் பேராசிரியர் இராம சாமி கூறினார். மக்களிடையே சில வேளைகளில் பிளவு ஏற்படுவதற்கும் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கும் ஊசிமுனை அளவும் தொடர்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தாய்மொழிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது பற்றியும் அப்பள்ளிகளின் மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பது பற்றியும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசியல்வாதிகள் பேச வேண்டுமே தவிர இவ்வாறு தாய்மொழிப் பள்ளிகளைக் குறைகூறி அறிக்கைகள் வெளியிடக்கூடாது என்றார் அவர்.

இனவாதப் போக்குடைய அரசியல்வாதிகள் தாய்மொழிப் பள்ளிகளைச் சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார். சீனப்பள்ளிகளில் இன்றைய நிலையில் 20 விழுக்காடு மலாய் மாணவர்கள் கல்வி பயில்வதைக் காண முடிகிறது. இந்தியப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இது ஏன் என சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனப் பள்ளிகளில் பொதுவாக கல்வித் தரத்தின் மீது பெற்றோர் நம்பிக்கை வைத்திருப்பதால் பிள்ளைகளை அங்கு அனுப்புகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here