பாம்பை ஏவி இளம்பெண்ணை கொன்ற வழக்கில்..

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. இவர் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த போது பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

பின்னர் மே மாதம் 7-ந் தேதி கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்த போது 2-வது முறையாக பாம்பு கடித்ததில் உத்ரா பரிதாபமாக இறந்தார்.

அந்த சமயத்திலும், அவருடைய கணவர் வீட்டில் இருந்துள்ளார். இது உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நகை, சொத்துக்கு ஆசைப்பட்டு உத்ராவின் கணவர் தான் விஷ பாம்பை ஏவி கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, ஒரு குழந்தைக்கு தந்தையான நிலையில் சூரஜூக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

உத்ரா 100 பவுன் நகை வைத்திருந்தார். அந்த நகையின் சில பவுனை நைசாக விற்ற சூரஜ், ஊதாரித்தனமாக செலவு செய்து வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, உத்ராவை நூதன முறையில் கொன்றுவிட்டு அவரது நகை மற்றும் சொத்தை அபகரித்து கள்ளக்காதலியுடன் சந்தோஷமாக வாழ திட்டமிட்டார்.

மேலும், உத்ராவின் நகை மூலம் தனது தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவும் எண்ணினார்.

சம்பவத்தன்று உத்ரா தனது தாய் வீட்டில் தங்கியிருந்த போது, சூரஜ் பாம்பாட்டியிடம் இருந்து ஒரு நல்ல பாம்பை விலைக்கு வாங்கி உத்ராவின் வீட்டுக்கு கொண்டு சென்றார்.

அங்கு இரவு உத்ராவுடன் தங்கினார். அப்போது, தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு அவர் மீது பாம்பை ஏவி கடிக்க செய்தார். இதில் உடலில் விஷம் ஏறிய நிலையில் உத்ரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்ட சூரஜ், விசாரணைக்கு பிறகு போலீசிடம் வசமாக சிக்கி கொண்டார். இந்த கொலை வழக்கில் சூரஜை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதே சமயத்தில், கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சூரஜின் தந்தை சுரேந்திரன், பாம்பாட்டி சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த கொலைக்கு சூரஜின் தாயார் ரேணுகா, தங்கை சூர்யா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. கொலை நடந்ததும் ஆதாரங்களை அழித்த அவர்கள் உத்ராவின் நகைகளை அபகரித்து வீட்டின் பின் பகுதியில் புதைத்து வைத்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மறைத்து வைத்திருந்த நகையை எடுத்து கொடுத்தனர். இதையடுத்து ரேணுகா, சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது, கொலை நடந்ததற்கான ஆதாரத்தை அழித்தது மற்றும் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நகை மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு தற்போது ஒரு குடும்பமே சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here