புறநகர் ரெயில்களை இயக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் மெட்ரோ, புறநகர் ரெயில் சேவைகளை இயக்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், பஸ் போக்குவரத்து ஆகியவை முடங்கி உள்ளன. இது மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக அமைந்துள்ளது.

பன்னடுக்கு திரையரங்குகள், சாதாரண திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே நலிவடைந்த பொருளாதாரத்தை தட்டி எழுப்புகிற வகையில் தளர்வு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க தொடங்கியது. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

இந்த ஊரடங்கு 31-ந் தேதி நிறைவு அடைய உள்ளது.

அதன்பின்னர் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, ‘அன்லாக்-4’ என்ற பெயரில் தளர்வு நடவடிக்கைகளும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தளர்வின் ஒரு அம்சமாக மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படலாம், திரையரங்குகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக ஊடக தளம் சார்பில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிற தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் விதத்தில் 25 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை, புறநகர் ரெயில் சேவையை இயக்குவதற்கு சர்வேயில் கலந்து கொண்ட மக்களில் 51 சதவீதம் பேர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 36 சதவீதத்தினர் மட்டுமே இந்த சேவைகளை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 77 சதவீதத்தினர், செப்டம்பர் 1-ந் தேதி முதல் திறந்தாலும்கூட பன்னடுக்கு திரையரங்குகளுக்கோ, திரையரங்குகளுக்கோ செல்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

* பன்னடுக்கு திரையரங்குகளிலும், திரையரங்குகளிலும் செய்துள்ள குளுகுளு வசதி (சென்டிரல் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம்) மிகவும் ஆபத்தானது, கொரோனா வைரஸ் தொற்று பரவலை அது துரிதப்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறந்தால் தங்கள் குழந்தைகளை அனுப்ப போவதில்லை என 62 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என தெரிவித்தனர்.

இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here