சுவீடன் நாட்டில் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு கலவரமாக வெடித்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளான சிரியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் போர் பதற்றம், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ஸ்கேண்டி நேவியன் நாடுகள் (Scandinavia countires) என அழைக்கப்படும் வட துருவத்துக்கு நெருக்கமாக உள்ள நாடுகளான ஐஸ்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் அகதிகள் அதிக அளவில் குடியேறியுள்ளனர். ஏனெனில் இங்கு மக்கள் தொகை குறைவாக உள்ளது.
இந்த நாடுகள் அகதிகளின் புகலிடமாக இருந்தாலும் அந்நாடுகளில் உள்ள பழமைவாத மக்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அங்கு இஸ்லாமிய மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பாதால் தங்கள் சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். இதனால் அகதிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சில பழமைவாத கட்சிகள் அங்கு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே சுவீடனின் தேசியவாத கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவர் ராஸ்மஸ் பலுதான் கடந்த வியாழக்கிழமை மால்மோ நகரில், ஸ்கேண்டி நேவியன் நாடுகளில் (Scandinavia countires) இஸ்லாமியமயமாக்கல்’ குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்தார். இருப்பினும், சட்டம் மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு ராஸ்மஸ் பலுதானிற்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாக நகரத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதனால், கோபமடைந்த ஆதரவாளர்கள், நேற்று முந்தினம், அவரது ஆதரவாளர்கள் குரானின் சில நகல்களை மால்மோவில் உள்ள ஒரு சாலையில் வைத்து எரித்து சேதப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதானல் ஆத்திரமடைந்த இஸ்லாமிய மக்கள்மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடித்தது. இதில் காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதோடு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.