நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் மாத்திரைகள்

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், இருதய, நீரிழிவு நோயாளிகளுக்கான மாதாந்திர மாத்திரை வீடு தேடி வந்து வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் அதிவேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். சேலம் மாவட்டம் முழுவதும் தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக் குள்ளாகி அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இருதய, நீரிழிவு நோயாளிகள் பலரும் மாதாந்திர மாத்திரை வாங்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். சேலம் மாவட்டம் முழுவதும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய, நீரிழிவு, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாதத்துக்கு தேவையான மாத்திரையை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்குவதன் மூலம், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படுவர். இதன் காரணமாக சுகாதாரத்துறை மூலம் இருதய, நீரிழிவு நோயாளிகளுக்கு மாதாந்திர மாத்திரையை வீடு தேடி வழங்கும் முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில் வெளியவர அச்சப்படும் முதியவர்களுக்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் முழு பாதுகாப்பு கவசம், முகக்கவசம், கையுறை அணிந்து வீடுகளுக்குச் சென்று மருந்து மாத்திரை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here