வெலிங்டன் –
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நியூஸிலாந்தின் மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டது.
நியூஸிலாந்தில் சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டது. ஆக்லாந்து நகரில் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் பலா் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து ஆக்லாந்து முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இத்தகைய சூழலில் ஆக்லாந்தில் கடந்த 2 வாரங்களாக அமலில் இருந்த பொது முடக்கத்தை ரத்து செய்வதாக நியூஸிலாந்து சுகாதார அமைச்சா் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ஆக்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் ஏற்கெனவே தொடா்பில் இருந்தவா்களுக்கே புதிதாக நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மற்றவா்கள் கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆக்லாந்து தற்போது மிகவும் பாதுகாப்பான பகுதியாக உள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.