தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இணைய வழியிலும் நடத்தப்படும் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கல்லூரிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால்,இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அறிவித்த பல்கலைக்கழக மானியக்குழு, அதனை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தவேண்டும் என அறிவுறுத்தியது.
இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் என்றும், மாணவர்கள் நேரில் வந்து எழுதவேண்டும் என்றும் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே . பி . அன்பழகன் தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் , மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுதுவது பாதுகாப்பற்றது என பேச்சு எழுந்தது . இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் , பல்கலைக்கழக கல்லூரி இறுதிப்பருவத் தேர்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும் என தெரிவித்தார். இணையவழியில் தேர்வா அல்லது மாணவர்கள் நேரில் வரவேண்டுமா என்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.