இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்ததற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகவும் பழைமையான பண்டைய நாகரீகங்களில் ஒன்றாக இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீகம் இருந்து வருகிறது. சுமார் 5000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாகரீகத்தில் நகரங்கள் நவீனத்துவத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிந்து சமவெளி நாகரீகத்தின் கலாச்சாரம் வாழ்க்கை முறை மொழிகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் ஆரியர்கள் வருகை மற்றும் பூகம்பங்கள் உள்ளிட்டவைகளால் மிகப்பெரிய சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்து என சொல்லப்பட்டாலும் அதற்கான முழுமையாக காரணங்கள் இன்னும் உறுதிபடுத்தப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சார்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்ததற்கு பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக், அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப கழகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 5,700 ஆண்டுகளுக்கு உண்டான தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், ‘பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், தெற்காசிய குகைகளின் பொங்கூசிப் பாறைக் கனிமப் படிவுகளில், ஒரு குறிப்பிட்ட வகை ரசாயன இருப்பின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டோம். இதன் மூலம் கடந்த 5,700 ஆண்டுகளில் அப்பகுதியில் பருவமழையின் அளவு பற்றிய தொகுதியை உருவாக்க முடிந்தது. ஆனால் பண்டைய கால பருவநிலை காலத் தொடரை இப்போதைய கணித மாதிரிகளில் கண்டுப்பிடித்துப் புரிந்து கொள்வது பெரிய சவாலான பணியாக இருந்தது என தெரிவித்தார்.
பகுப்பாய்வின்படி இந்த நாகரீகம் உதயமாவதற்கு சற்று முன், பருவநிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்த நாகரீகம் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக இந்த பருவநிலை மாற்ற வகைமாதிரி தலைகீழ் மாற்றம் அடைந்தது. இதனால்தான் பருவநிலை மாற்றமே சிந்து சமவெளி மாற்றத்துக்குக் காரணமாக நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதை நீக்கமற நிரூப்பிக்க இன்னும் தரவுகளும் ஆய்வு மாதிரிகளும் தேவை என அவர் தெரிவித்தார்.