அம்னோ பரிந்துரை
கோலாலம்பூர் –
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அளவுக்கு சிலாங்கூரில் உள்ள ஆறுகளின் நீரில் மீண்டும் மாசு ஏற்பட்டிருப்பதால் நடப்புச் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி பரிந்துரைத்தார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் குடிநீர் விநியோகம் தடைபட்டதால் ஏறத்தாழ 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
ரவாங்கில் உள்ள கோங் ஆற்றில் தொழிற்சாலையின் கழிவுகள் கலந்ததால் சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டன.
இதனைக் கருத்தில் கொண்டு சட்டவிதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். மாசு ஏற்பட்ட ஆறுகளைச் சுத்தம் செய்வதற்கு ஏற்படும் செலவுத் தொகையில் 10 மடங்கு அதிகமாக அபராதத் தொகையை உயர்த்தும் வகையில் சட்டதிருத்தம் வேண்டும் என்று ஹமிடி கூறினார்.
நாட்டின் குடிநீர் விநியோகத்தில் கீழறுப்புச் செய்ததற்காக ஆறுகளில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்டாய சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
அது மட்டுமன்றி குற்றம் புரியும் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் உரிமையாளர்களும் இயக்குநர் வாரிய உறுப்பினர்களும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு எந்த வர்த்தகத்திலும் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.