கோலாலம்பூர், செப். 8-
ரவாங் சுங்கை கோங் ஆற்றில் மாசு ஏற்படுத்தியதாக கூறப்படும் நிறுவனத்தின் இரு பணியாளர்களுக்கு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 நாட்கள் தடுப்பு காவல் விதித்துள்ளது.
ரவாங் ஜாலான் பத்து ஆராங்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் நேற்று காலை மாஜிஸ்திரேட் நிக் முகமட் ஃபட்லி நிக் அஸ்லான் தடுப்பு காவலை வழங்கினார்.
உயிரணங்கள் பயன்படுத்தும் நீரில் மாசு ஏற்படுத்திய குற்றத்தின் அடிப்படையில் இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களின் குற்றம் நிரூபணமானால் 30 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
முன்னதாக இதே விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள் நால்வருக்கு கடந்த சனிக்கிழமை 6 நாட்களுக்கு தடுப்பு காவல் விதிக்கப்பட்டது. 50 முதல் 60 வயதுடைய அவர்கள் தந்தையின் மறைவுக்கு பிறகு இந்த நிறுவனத்தை வழிநடத்தி வந்துள்ளனர்.
கடந்த வியாழக் கிழமை சுங்கை கோங் ஆற்றில் மாசு ஏற்பட்டதால் சுங்கை சிலாங்கூர் ஃபாசா 1,2,3 மற்றும் ரந்தாவ் பாஞ்சாங் ஆறுகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கூட்டரசு பிரதேசம், கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் 1,292 இடங்களில் நீர் விநியோக தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
























