சந்திப்பு : எம்.எஸ்.மலையாண்டி, படங்கள்: தி.மோகன்
கோலாலம்பூர்:
உடலில் இருதயப் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருப்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கு மருத்துவப் பரிசோதனை மிகச் சரியான வழி என்று CARDIAC VASCULAR SENTRAL KUALA LUMPUR எனப்படும் இஙகு மருத்துவமனையின் இருதய மருத்துவச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயகாந்தன் குழந்தைவேலு ஆலோசனை கூறியிருக்கின்றார்.
3 மாதத்திற்கு ஒரு முறையோ 6 மாதத்திற்கு ஒரு முறையோ 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக இருதயம் போன்ற உடல் ரீதியான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெற முடியும் என்று அவர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:
கே: இருதய ரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் சிவிஎஸ் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது?
ப: ஒரு நோயாளிக்கு 100 விழுக்காடு அளவில் இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பொதுவாக அவருக்கு இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றது. இது வழக்கமான நடைமுறையில் இருக்கக்கூடிய மருத்துவ சிகிச்சையாகும்.
இரண்டாவதாக என்ஜிஓ பிளாஸ்டி எனப்படும் கால் அல்லது கைகள் வாயிலாகப் பலூன் செலுத்தி இருதய ரத்தக் குழாயில் ஸ்டென்ட் வைக்கும் சிகிச்சை ஆகும். (இது ஸ்பிரிங் போன்ற தன்மை கொண்டது.)
இதுபோன்ற சிகிச்சைகளை அளிக்கும் விஷயத்தில் ஒரு மருத்துவர் மட்டும் முடிவு செய்வதில்லை. மாறாக மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி விவாதித்து, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை செய்வதா அல்லது என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சை செய்வதா என்பதைத் தீர்மானிப்பார்கள்.
இது அந்தந்த நோயாளிகளின் இருதய நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகின்றது. சில நோயாளிகளுக்கு 100 விழுக்காடு அளவு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் அவருக்கு இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்படும்.
மற்றபடி மோசமான இருதய ரத்தக்குழாய் அடைப்பு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பதற்கு ஆலோசனை கூறப்படுவது உண்டு.
கே: இருதய ரத்த அடைப்பு பாதிப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பற்றி விவரிக்க முடியுமா?
ப: இது அந்தந்த நோயாளிகளின் இருதய வலிமை எந்தளவுக்கு உள்ளது என்பதைப் பொறுத்து அமைகிறது. சில நோயாளிகளுக்கு என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்படும்போது அவர்களின் இருதயம் பலவீனமாக இருந்தால் அவர்களின் இருதயத்தில் தற்காலிக அடிப்படையில் இம்பெல்லா எனும் கருவியைப் பொருத்தச் செய்கிறோம்.
இந்தக் கருவியின் பணி என்னவென்றால் உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சுவதற்கு இருதயத்திற்கு துணையாக இருக்கும். ஒரு டியூப் வாயிலாக இந்த இம்பெல்லா கருவியை இருதயத்தில் பொருத்த வேண்டும். இதனுடைய வேலை ரத்தத்தைப் பாய்ச்சுவதில் இருதயத்திற்கு உறுதுணையாக இருக்கும். சிகிச்சை முடிந்த 30 அல்லது 48 மணி நேரத்திற்கு இந்தக் கருவி இருதயத்தில் இருக்கும். அதன்பின் அது அகற்றப்படும்.
சிவிஎஸ் மருத்துவமனையில் சுமார் 11 நோயாளிகளுக்கு இந்த இம்பெல்லா கருவி பொருத்தப்பட்டு இருதய சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது சிவிஎஸ் மருத்துவமனையில் மட்டுமே இந்த இம்பெல்லா கருவி இருதய என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இம்பெல்லா மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவு அதிகமாக இருக்கும். பலவீனமான இருதயத்தைத் கொண்ட நோயாளிகளுக்கு இக்கருவி பேருதவியாக இருக்கின்றது.
கே: இருதய சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் நிலை பற்றி விவரிக்க முடியுமா?
ப: இருதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ள நோயாளிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து முதலில் அவர்களுக்கு எடுத்துரைப்போம். மிக மோசமான அடைப்பு இருந்தால் இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படும். சாதாரண அடைப்புகள் இருந்தால் என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சை செய்துகொள்ள ஆலோசனை கூறுவோம்.
சிலர் இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை வேண்டாம், என்ஜிஓ பிளாஸ்டி செய்துகொள்ளலாம் என்றும் கூறுவார்கள். மேலும் சிலர் மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம் எனவும் விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் எந்தச் சிகிச்சை எந்தளவுக்குச் சிறந்த பலனைத் தரும் என்பதை நாங்கள் நோயாளிகளுக்கு விளக்குவோம். 30 வயதுடைய நோயாளிகளுக்கும் 80 வயதுடைய நோயாளிகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. 30 வயதுடைய நோயாளி மருந்து, மாத்திரைகள் மூலம் இருதய ரத்த அடைப்பைச் சரிசெய்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் இதற்கு என்ஜிஓ பிளாஸ்டி போன்ற முறையான சிகிச்சைதான் சிறந்த வழியாக இருக்கும். இருதய ரத்தக்குழாய் அடைப்புக்கு வழங்கப்படும் சரியான சிகிச்சைதான் சிறந்த பலனை அளிக்கவும் முடியும்.
கே: என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், சவால்கள் பற்றி விவரிக்க முடியுமா?
ப: என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சையில் சவால்களும் உள்ளன, சிக்கல்களும் உள்ளன. இது அந்தந்த நோயாளிகளின் உடல்நிலையில் அல்லது இருதய நிலையைப் பொறுத்து அமைகின்றது. சில நோயாளிகளுக்கு வெவ்வேறான கருவிகளையும் அறுவைச் சிகிச்சைக்கான சாதனங்களையும் வெவ்வேறு நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்படியான சிகிச்சைக்களுக்கான செலவு மிக மிக அதிகமாக இருக்கும்.
கே: டாக்டர், சிலர் இருதயத்தில் ஒரு ஸ்டென்ட், 2 ஸ்டென்ட் அல்லது 3 ஸ்டென்ட் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே… இதுபற்றி விளக்கம் தாருங்கள்…
ப: இது ஒரு நோயாளியின் இருதய ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு எவ்வளவு நீளத்திற்கு உள்ளது என்பதைப் பொறுத்து அமைகிறது. பொதுவாக 48 எம்எம் அளவிலும் அதிக நீளமாக 60 எம்எம் அளவிலும் ஸ்டென்ட் உள்ளது. ஆனால் ஒரு நோயாளிக்கு இதைவிட நீளமான அளவுக்கு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் அதற்கு ஏற்பத்தான் இந்த ஸ்டென்ட் இருதயத்தில் வைக்கப்படுகிறது. இதனால் சிலருக்கு 2 அல்லது 3 ஸ்டென்டுகள் வரை வைக்கப்படுவது உண்டு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் இருதயத்தில் வைக்கப்படும் இந்த ஸ்டென்டுகளுக்குப் பின்னால் இருதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இருக்கும் கொழுப்பு அப்படியேதான் ஒட்டிக்கொண்டிருக்கும். ஸ்டென்ட் வைக்கும்போது ஒருவேளை கொழுப்பு துளிகளாக உடையக்கூடும். ஆனால் இருதயத்தில் ஒட்டியிருக்கும் அடைப்பு ஸ்டென்ட் வைத்தாலும் அதைப் பின்புறமாக அழுத்தியபடிதான் இருக்கும். இந்த ஸ்டென்டின் வேலை என்ன வென்றால் இருதய அடைப்புக் குழாயை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதாகும். இதனை நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கே: சரி டாக்டர்… இப்படி இருதய ரத்தக்குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்ட பிறகும் ஒருவருக்கு மீண்டும் அடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்து வருமா?
ப: மீண்டும் அடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை மறுக்க முடியாது. இருதய ரத்தக்குழாயில் ஸ்டென்ட் வைத்துவிட்டோம் இனி பிரச்சினை இல்லை… எல்லாம் சரியாகிவிட்டது என்று நோயாளிகள் ஒருபோதும் கருதிவிடக்கூடாது. என்ஜிஓ பிளாஸ்டி செய்த பிறகு மருத்துவ நிபுணர் கூறும் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை முறையாக உட்கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கொழுப்புச்சத்து, இனிப்பு அளவு, ரத்தக்கொதிப்பு போன்றவற்றை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வாழ்க்கை முறையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றத் தவறினால் ரத்தக்குழாயில் என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு வரக்கூடும்.
என்ஜிஓ பிளாஸ்டி எனப்படும் இருதய ரத்தக்குழாயில் ஸ்டென்ட் வைக்கும் மருத்துவ முறை சிறந்ததுதான். பலர் ஸ்டென்ட் வைத்து 20 ஆண்டுகள் வரைகூட எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்கின்றனர்.
கே: டாக்டர் இருதய ரத்தக்குழாய் அடைப்புக்கு முக்கிய காரணம் என்ன?
ப: இருதய ரத்தக்குழாய் அடைப்புப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது மிதமிஞ்சிய கொழுப்புச் சத்துதான். உடலில் கொழுப்பு அளவு அதிகரித்தால் இறுதியில் அதுவே இருதய ரத்தக் குழாய் அடைப்புக்கு வழிவகுத்துவிடும். ஆகவே உடலில் கொழுப்பு அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதற்குரிய மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சை செய்த பிறகும் சிலர் முறையான உடல் கவனிப்பில் கவனம் செலுத்தா விடில் ஆபத்துகள் வரக் கூடும். மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்ற ஆபத்துகள் வரக்கூடும் என்பதால் அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க அவர்கள் மருந்துகளை முறையாக உட்கொள்வதுடன் சிறந்த உணவுப் பழக்கத்தையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
கே: ஒருவருக்கு இருதயத்தில் பிரச்சினை என்றால் அதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்ன?
ப: இருதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கு சில சமயம் மயக்கம் வரும். சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் பொதுவாக மூளைப் பரிசோதனை செய்துகொள்வார்கள். அப்படி இருந்தும் அதே நிலை நீடித்தால் அவர்கள் ஸ்ட்ரெஸ்ட் டெஸ்ட் எனப்படும் பரிசோதனை உள்ளிட்ட சில மருத்துவப் பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் இருதய நோய் இருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கே: டாக்டர் இருதய நோய் போன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் யாவை?
ப: இப்போதெல்லாம் இருதய நோய் குறிப்பாக மாரடைப்பு இளம் வயதினருக்குக்கூட ஏற்பட்டுவிடுகிறது. முன்பு 50 முதல் 60 வயதுடையவர் களுக்கு மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இப்போது 30 முதல் 40 வயது ஆனவர்களுக்குக்கூட மாரடைப்பு போன்ற இருதய நோய் ஏற்பட்டுவிடுகிறது. இந்தியர்களும் இவர்களுள் அடங்குவர். என்னிடம் சிகிச்சைப் பெற்ற ஒரு நோயாளிக்கு 18 வயதுதான் ஆகிறது. இவர் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். அப்படி இருந்தும் இவருக்கு இருதயப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இதுபோன்ற நோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய சிறந்த வழி மருத்துவப் பரிசோதனை ஆகும். 40 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 3 மாதம் அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் நோய்ப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இப்போதெல்லாம் 40 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்குத் திடீர் மரணம் மாரடைப்பு மூலம் ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றன.
ஆகவே பொதுமக்கள் இனியும் அலட்சியமாக இல்லாமல் தங்கள் வாழ் நாளில் மருத்துவப் பரிசோதனையைக் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ஜெயகாந்தன் குழந்தைவேலு மக்கள் ஓசைக்கு அளித்த பேட்டியில் என்ஜிஓ பிளாஸ்டி சிகிச்சையை குறித்து விவரித்தார். இவர் ஐஜேஎன் எனப்படும் தேசிய இருதயக் கழகத்தில் பல ஆண்டுகள் இருதய சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்தவர்.