ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா?

நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இ பாஸ் பெற்று வரலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார். அதே போல கொடைக்கானலில் பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்படுவதால் இ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வரலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சுற்றுலா செல்பவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இயற்கை அழகை ரசித்து வரலாம்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அனைவரையும் முடக்கிப்போட்டு விட்டது. பல மாதங்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தவர்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்து விட்டனர். ஆலயங்கள் திறக்கப்பட்டு விட்டன. இப்போது சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் சென்று வர அனுமதிக்கப்பட உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் முதல் தோட்டக்கலை பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்படுகிறது. அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. ஏற்கனவே அரசு அறிவித்தபடி பொது பூங்காக்கள் மட்டும் திறக்கப்படுகிறது. பூங்காக்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்ப உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் இருந்து வரும் நீலகிரி மக்கள் உள்ளூர் முகவரி ஆதார் அட்டையை காண்பித்து வரலாம். பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

சுற்றுலா சம்பந்தமாக நீலகிரிக்கு வருகிறவர்கள் எத்தனை நாள் தங்கி இருக்க விண்ணப்பிக்கிறார்களோ, அதற்கு ஏற்ப இ-பாஸ் வழங்கப்படும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அறிகுறி தென்பட்டால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்த அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளரிடம் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து இ-பாஸ் சுற்றுலா என்ற பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே வேலை, தொழில் சம்பந்தமாக வருபவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை தொடர்ந்து இருக்கும். ஏற்கனவே காட்டேஜ், தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா சம்பந்தமாக வருகிறவர்கள் இ-பாசை காண்பித்து தங்கி கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர். வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.

பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருகிறவர்கள் இ-பாஸ் பெற்று வரலாம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படும்.

இதுநாள் வரைக்கும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தவர்கள் சுற்றுலா கிளம்பினாலும் பாதுகாப்பாக பயணம் சென்று இயற்கை அழகை ரசித்து விட்டு வரலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here