நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8% ஆக சரியும்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8 சதவீதமாக சரியும் என ரேட்டிங்ஸ் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்துக்கு ₹18.44 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்துறைகள், நிறுவனங்கள் முடங்கி விட்டன. இதனால், கடுமையாக சரிந்த பொருளாதாரம் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9% ஆக சரிந்தது என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. விவசாயம் தவிர அனைத்து துறைகளும் சரிவை சந்தித்தன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், பொருளாதார ரேட்டிங்ஸ் நிறுவனங்க புதிய கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடையலாம். இருப்பினும், மீட்பு மிக மந்தமானதாகவும், சமநிலை இல்லாமலும் இருக்கும். எனவேதான், பொருளாதார வளர்ச்சி -10.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. இதுபோல், இந்தியா ரேட்டிஸ் நிறுவனமும் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -11.8 சதவீதமாக இருக்கும். தற்போது 6வது முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், வரலாற்றில் இதுவரை இல்லாத சரிவாக இது இருக்கும் இதற்கு முன்பு கடந்த 1979-80 நிதியாண்டில் இருந்த -5.2 சதவீதம் மட்டுமே அதிகபட்ச சரிவாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இழப்பு ரூ18.44 லட்சம் கோடியாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -11.1 சதவீதம் ஆக சரியும் என ஏற்கெனவே கணித்திருந்தது. இந்நிலையில், நேற்று  வெளியிட்ட கணிப்பில் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி -14.8 சதவீதமாக சரியும் என தெரிவித்துள்ளது. இதுபோல், இந்தியாவின் ஜிடிபி -10.8 சதவீதமாக  சரியும் என நோமுரா நிறுவனமும், -7.2 சதவீதமாக சரியும் என எச்எஸ்பிசி, -5  சதவீதமாக சரியும் என மோர்கன் ஸ்டான்லி, -10.9 சதவீதமாக சரியும் என பாரத ஸ்டேட் வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?
மற்ற நாடுகளை விட கொரோனாவால் பொருளாதார பாதிப்பு இந்தியாவுக்குதான் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருப்பதாவது:
* பிற நாடுகளை விட இந்தியாவில்தான் மிக கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
* பொருளாதாரத்தை மேம்படுத்த மற்ற நாடுகளை விட இந்தியா குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது.

* இந்திய பொருளாதாரம் இன்று நேற்றல்ல, 2018ம் ஆண்டில் இருந்தே பாதிப்படைந்து வருகிறது. கொரோனா அதை மேலும் மோசமாக்கி விட்டது.
* பொருளாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் நுகர்வு, முதலீடு, ஏற்றுமதி ஆகியவை மந்த நிலையில்தான் உள்ளன.
* இவற்றில் இருந்து மீள நேரடி நிதி உதவிகளும், சிறு, குறு தொழில்கள், உற்பத்தி, ஏற்றுமதி, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு துரித நடவடிக்கைகளும் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here