போதை பொருள் வழக்கில் கைதான சுஷாந்த் சிங் காதலி

போதை பொருள் வழக்கில் கைதான சுஷாந்த் சிங் காதலி நடிகை ரியா சக்கரபர்த்தி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து மும்பை போலீசிடம் இருந்து சிபிஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுஷாந்த் சாவில் அவருடைய காதலியான நடிகை ரியா சக்கரபர்த்திக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரியா சக்கரபர்த்தி ரூ.15 கோடி அளவுக்கு பணம் எடுத்து மோசடி செய்ததாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் அளித்த புகாரின் பேரில் ரியாவிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும், நடிகை ரியா போதை பொருள் வாங்கியதாகவும் வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு  அதிகாரிகள் ரியாவிடம் விசாரணை  நடத்தினர். அப்போது தான் போதை பொருள் பயன்படுத்துவதில்லை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்காக வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ரியாவின்  தம்பி ஷோவிக் சக்கரபர்த்தி, சுஷாந்தின் மானேஜர் சாமுவெல் மிரண்டா உட்பட சிலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ரியாவிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 3வது நாளான நேற்று விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். இதையடுத்து இன்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், போதைப் பொருள் வாங்கியது, வைத்திருந்த வழக்கில் ரியாவுக்கு செப் 22ம் தேதி வரை நீதிமன்றகாவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து நடிகை ரியா சக்கரபர்த்தி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here