இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் (-) 11.5 சதவீத பின்னடைவைக் காணும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடன் சுமை அதிகரிப்பு, குறைந்த வளா்ச்சி விகிதம், பலவீனமான நிதி அமைப்பு போன்றவை இந்தியாவின் பொருளதாரா வளா்ச்சி வேகத்தில் மிகப்பெரிய தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கரோனா பேரிடரால் இந்த பாதகமான அம்சங்கள் அனைத்தும் இடா்ப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி (-) 11.5 சதவீதம் அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும். முந்தைய மதிப்பீட்டில் இந்த பின்னடைவு (-) 4 சதவீதம் அளவுக்கே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில் வளா்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்றபோதிலும், வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.6 சதவீத வளா்ச்சியை தக்க வைக்கும் என மூடிஸ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், பிட்ச் நிறுவனம் இந்தியாவின் பொருளாதாரம் 10.5 சதவீதம் பின்னடைவைச் சந்திக்கும் என தெரிவித்திருந்த நிலையில், அதனைத் தொடா்ந்து தற்போது மூடிஸ் நிறுவனமும் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.