தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் என்.டி.ஆரின் கதை

10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமராவ் பற்றிய பாடத்தை சேர்த்ததற்காக என்.டி.ஆரின் குடும்பத்தினர் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

நந்தமுரி தாரக ராமராவ் என்பதே என்.டி.ஆரின் முழு பெயர். அவரது காலத்தில் மிகப் பிரபலமான நடிகராகத் திகழ்ந்தவர். அந்தப் புகழே அவரை அம்மாநில முதல்வர் என்கிற நிலை வரை உயர்த்தியது. மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் என்.டி.ஆருக்கு இன்றுவரை கூட ரசிகர்கள் உள்ளனர். ஆந்திராவில் நந்தமுரி குடும்பத்தினர் அனைவருக்குமே இந்த மரியாதை சமமாகக் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பாடமாகச் சேர்த்துள்ளது தெலங்கானா அரசு. இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா உட்பட என்.டி.ஆரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். என்.டி.ஆரின் மகன் நந்தமுரி ராமகிருஷ்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், “பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக, எங்கள் தந்தை ஸ்ரீ நந்தமுரி தாரக ராமராவின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்த்ததற்கு, எங்கள் குடும்பத்தின் சார்பாக, தெலங்கானா மாநில அரசுக்கும், எங்கள் அன்பார்ந்த முதல்வர் ஸ்ரீ கே சந்திரசேகர் ராவ் அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் நன்றி.

நான் மட்டுமல்ல, தெலுங்கு பேசும் இரண்டு மாநில மக்கள் அனைவரும், உலகெங்கிலும் இருக்கும் தெலுங்கு மக்களும், கேசிஆர் அவர்களின் இந்த கனிவான செயலுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம். வரும் பல தலைமுறைகளுக்கு ஸ்ரீ என்.டி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். ஒழுக்கம், நேர்மை, தான் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற உறுதி, சமூகத்தின் மீது அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு, வறியவர்களை ஏழ்மையிலிருந்து, மற்ற சமூக அநீதிகளிலிருந்து மீட்கும் பார்வை என அனைத்தும் கண்டிப்பாக மாணவர்களுக்கு ஒரு உந்துதலைத் தரும். நம் நாட்டின் நல்ல குடிமகன்களாக மாறும் ஊக்கத்தைக் கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here