முத்திரையை பதித்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள்

அம்மன், நீலாம்பரி, ராஜாமாதா ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுறாங்க.

நடனக் கலைஞராக மேடைகளில் தனது நாட்டியத் திறமையால் ஜொலித்த ரம்யா கிருஷ்ணன், தனது 14 வயதில் வெள்ளை மனசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மறைந்த பழம்பெரும் நடிகர் சோ ராமாசாமியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரத நாட்டியம், குச்சிப்புடி கலைகளில் தேர்ச்சி பெற்ற ரம்யா கிருஷ்ணன், ஹீரோயின், வில்லி, அம்மன், அம்மா கதாபாத்திரங்கள் என ஏகப்பட்ட அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதில் சில சூப்பரான கதாபாத்திரங்கள் குறித்து இங்கே காண்போம்.

நீலாம்பரி

ரம்யா கிருஷ்ணன் என்று சொன்ன உடனே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் வரும் நீலம்பரி கதாபாத்திரம் தான் அனைத்து ரசிகர்களுக்கும் உடனே நினைவுக்கு வரும். திமிர் பிடித்த ஒரு ஹீரோயின், 18 வருஷம் ஹோம் குவாரண்டைன் என ஒரு எபிக் வில்லியாகவே நடித்து அசத்தி இருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

அம்மன்

கே.ஆர். விஜயாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அம்மன் கதாபாத்திரத்தில் பார்க்கும் ஒரே நபர் ரம்யா கிருஷ்ணன் தான். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான அம்மன் படத்தில் வில்லன் சண்டாவை ஆக்ரோஷமாக அழிக்கும் காட்சியை இப்ப பார்த்தா கூட அல்லு விட்ரும். அம்மன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராஜகாளியம்மன், ராஜேஷ்வரி, அன்னை காளிகாம்பாள் என ஏகப்பட்ட படங்களில் அம்மனாக நடித்து அருள் பாலித்தார்.

மேகி அலைஸ் மரகதவள்ளி

ரஜினிகாந்த் உடன் படையப்பா படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், உலக நாயகன் கமல்ஹாசன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் கிளாமர் வில்லி மேகியாக நடித்து ரகளை செய்தார். ஆளுயர கேக்கில் இருந்து வெடித்துக் கொண்டு வெளியே வரும் காட்சியில் இருந்து, வந்தேன் வந்தேன் பாடலில் சிம்ரனை கடுப்பேற்றி டீஸ் பண்ணும் காட்சிகள் என எக்கச்சக்க சிக்ஸர் அடித்திருப்பார்.

ராஜமாதா சிவகாமி தேவி

படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் இந்திய திரையுலகம் மட்டுமின்றி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார் என்றால் அது பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் தான். மடியில் வைத்துக் கொண்டு இரு மார்பிலும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அந்த ஒரு காட்சியே போதும் அவரது சிம்மாசனத்தை யாருமே பிடிக்க முடியாது என்பதற்கு!

சக்தி சேஷாத்ரி

சினிமா படங்களில் மட்டுமின்றி, தன்னால் வெப்சீரிஸிலும் கலக்க முடியும் என்பதை குயின் வெப்சீரிஸ் மூலம் நிரூபித்து இருந்தார் ரம்யா கிருஷ்ணன். கெளதம் மேனன் இயக்கத்தில், மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் ஜெராக்ஸ் கதாபாத்திரமான சக்தி சேஷாத்ரி கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்து கலக்கி இருந்தார். குயின் 2வுக்கு வெயிட்டிங்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here