சொக்சோ அமைப்பின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ள பெஞ்ஜானா வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழி கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் நாட்டில் இதுவரை 47,332 பேருக்கு வேலை கிடைக்கும் சுழல் ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
பத்தாங்காலியில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு கார்னிவெலுக்கு சிறப்பு வருகை புரிந்த அவர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மலேசியாவில் அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ள மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது. இம்மாதம் முதல் வாரத் தரவின்படி இம்மாநிலத்தில் சுமார் 54,174 வேலைகள் காலியாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்யும் செயல் திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த ஜூன் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட MY Future Jobs தளத்தில் இந்தக் கணக்கீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் நடைபெறும் பெஞ்ஜானா வேலை வாய்ப்பு கார்னிவெலில் 20 முதலாளி தரப்பினர் கலந்து கொண்டு மொத்தமாக 6,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக தாப்பா மற்றும் மலாக்காவில் நடைபெற்ற இந்தக் கார்னிவெலின் வாயிலாக 1,117 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இதற்கிடையே அதிகமானோர் வேலை இழந்த மாநிலமாகவும் சிலாங்கூர் இருக்கின்றது. இம்மாநிலத்தில் இதுவரை 23,421 பேர் வேலை இழந்த நிலையில் நாடு தழுவிய அளவில் மொத்தமாக 79,737 பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்காக குறிப்பாக இளைஞர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பெஞ்ஜானா திட்டத்தின் வாயிலாக பலரும் நன்மை அடைந்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.
குறிப்பாக இந்தக் கார்னிவெலின் அடித்தளமாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன்வழி முதலாளி தரப்பினர் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகின்றது.
இவ்விரு செயல்பாடுகளுக்கும் முதுகெலும்பாக MY Future Jobs தளம் செயல்படுகின்றது. அதிலும் 6 மாதங்கள் வரை தலா ஒரு தொழிலாளிக்கு 600 வெள்ளியில் இருந்து 1,000 வெள்ளிக்குள் வேலை சேர்ப்பு, ஊக்கத்தொகையை முதலாளிகள் விண்ணப்பிப்பதை உறுதி செய்ய முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இத்தளத்தில் இலவசமாகப் பதிவு செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது மட்டுமன்றி வேலையில்லாத் திண்டாட்டத்தை முறியடிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அனைத்துத் தரப்பினரும் ஆதரவு நல்க வேண்டும் என அமைச்சர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மக்களின் தேவையை அறிந்து இந்தக் கார்னிவெலை உலு சிலாக்கூர் மாவட்டத்தில் உடனடியாக நடத்த முனைந்த NIOSH குழுமத்தின் துணைத் தலைவர் செனட்டர் டத்தோ டி. மோகனையும் டத்தோஸ்ரீ சரவணன் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சரோடு சொக்சோ குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா ஹாஜி அப்துல்லா, சொக்சோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ், டத்தோ டி. மோகன் ஆகியோரும் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்தக் கார்னிவெலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்தனர்.
இதற்கிடையே, NIOSH அமைப்பின் ஆதரவில் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.