இது பட்டாம்பூச்சி மாதம்

‘பட்டாம்பூச்சி’ என்றாலே எல்லோர் மனதிலும் வானில் சிறகடித்து பறக்கும் உணர்வு ஏற்படும். பல வண்ணச் சிறகுகளை விரித்து அவை வட்டமடிக்கும் அழகை ஒரு நொடி பார்த்தால் கூட நீங்காத மனப்பாரம் பறந்தோடி விடும். இயற்கை அன்னை வார்த்தெடுத்த அந்த பறக்கும் ஓவியத்திற்கும், மனிதர்களுக்கும் இடையே அந்த அளவிற்கு ஒரு மெல்லிய உள்ளுணர்வு ஒட்டி உறவாடுகிறது.தேனீக்களுக்கு அடுத்து பூக்களில் நடக்கும் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமான இருக்கும் இந்த பட்டாம்பூச்சிகளை உலக அளவில் கொண்டாடாத நாடுகளே இல்லை. சில நாடுகளில் மனஅமைதியின்றி தவிப்போருக்கு பட்டாம்பூச்சிகளின் அழகை ரசிக்க வைக்கும் மருத்துவ முறையும் பின்பற்றப்படுகிறது. அவற்றை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக அளவில் செப்டம்பரை ‘பட்டாம்பூச்சி மாதம்’ ஆக கொண்டாடுகின்றனர்.இந்தாண்டு இந்தியாவிலும் இக்கொண்டாட்டம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய உயிரியல் மையம் மற்றும் நேச்சுரல் ஹிஸ்டரி அமைப்புடன் 50 தன்னார்வ இயக்கங்கள், பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர்கள், சூழல் ஆர்வலர்களும் இக்கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர்.இதன் முக்கிய நோக்கம், உலகளவில் உயிர் வாழும் பட்டாம்பூச்சி வகைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பது தான். இதன் ஒரு பகுதியாக செப்.,14 முதல் பட்டாம் பூச்சிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இவற்றின் விவரங்கள் நாடு முழுவதும் ‘பட்டர்பிளைஸ் இந்தியா’, ‘ஐநேச்சரலிஸ்ட்’ மற்றும் ‘இந்திய பல்லுயிர் போர்டல்’ போன்ற இணையதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

மதுரையில் 100 இடங்கள்மதுரையில் அமெரிக்கன் கல்லுாரி கிரீன் கிளப் இதற்கு பொறுப்பேற்று பல்வேறு கல்லுாரி மாணவர்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாம்பூச்சிகளை கணக்கிடும் பணி நடக்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது: உலகளவில் 28,000 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன. தற்போது வரை 17,500 வகைகள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அழகிகள், வெள்ளையன்கள், மஞ்சள் வெள்ளை நுனிச்சிறகிகள், வரியன்கள், துாரிகைநார் செதில் காலிகள், நீலன்கள், தாவிகள், துள்ளித்தாவும் வகைகள் என இதுவரை 319 வகை இனங்கள் பதிவாகியுள்ளன.மேற்கு தொடர்ச்சியில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள இவை, செப்., இறுதி முதல் அக்., துவக்கத்தில் மீண்டும் மேற்கு நோக்கி இடம் பெயரும்.

இவ்வினங்கள் கணக்கெடுக்கும் பணியும், பட்டாம்பூச்சி தொடர்பான இணையவழி கருத்தரங்கு, வினாடி வினா உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகளும் நடக்கின்றன என்றார்.’பட்டாம்பூச்சி காதல்’ தம்பதிமதுரை கலைநகரை சேர்ந்த பொறியாளர்கள் சித்ரா – ரத்தின குமார். இவர்கள் திண்டுக்கல் ரோட்டில் இயற்கை சூழ்ந்த ஹவாவெலி பகுதியில் தோட்டம் அமைத்து மூலிகை செடிகள் மற்றும் அரிய வகை தாவரங்கள் வளர்க்கின்றனர். அதில் ஒரு பகுதி பட்டாம் பூச்சிகள் வருகைக்காக பிரத்யேக செடிகளை நட்டு பராமரிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:பட்டாம்பூச்சி மீது எங்களுக்கு இனம் புரியாத காதல் உள்ளது. அமெரிக்கா சென்றபோது இவைகளுக்கான பிரத்யேக பூங்காவை பார்த்தோம்.

அது மேற்பகுதியில் மூடப்பட்டு இருந்தது. அதை பார்த்து தான் இங்கே தோட்டம் அமைக்க முடிவு செய்தோம். பட்டாம்பூச்சி என்றால் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதால் திறந்த வெளி தோட்டமாக அமைத்தோம்.ஆறு ஆண்டுகளாக வார விடுமுறைக்கு தவறாமல் இங்கு வந்து விடுவோம். பட்டாம்பூச்சிகளை பார்க்கும்போதே மனசுக்குள் ஒருவகைபரவசமும், குழந்தை தனமும் ஏற்படும்.

அவைகள் வருவதற்காக அவைகள் விரும்பும் கறிவேப்பிலை, கிலுகிலுப்பை, எலுமிச்சை, எருக்கலை, தாத்தா பூ, பெண்டாஸ், இட்லி பூ, போகேன் வில்லா, உன்னி பூ, பீனாரி பூ, துளசி உள்ளிட்ட செடிகளை நட்டுள்ளோம்.50க்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் வந்து செல்கின்றன. கொரோனா ஊரடங்கில் எங்களுக்கு உற்சாகம் தந்த இடம் இந்த தோட்டம் தான். உலக பட்டாம்பூச்சி கொண்டாட்டத்தில் உற்சாகமாகஎங்களை இணைத்துக் கொண்டுள்ளோம் என்றனர். சிறுமலையில் பட்டாம்பூச்சி ஆய்வுபேராசிரியை ஜாய் ஷர்மிளா, பட்டாம்பூச்சிகள் ஆராய்ச்சியாளர், மதுரை: மதுரையில் அழகர்கோவில் மலைப் பகுதியில் அதிக பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன.

யு.ஜி.சி.,யின் திட்டம் சார்பில் இரு ஆய்வுகள் நடந்தப்பட்டன. 101 வகை பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கப்பட்டன. டார்க் புளு டைகர், இந்தியன் குரோ, காமன் கிராஸ், கிரிம்சஸ் ரோஸ், காமன் மர்மாம் உள்ளிட்ட வகைகள் மதுரை கிராமங்களில் அதிகம் காணப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் சார்பில் திண்டுக்கல் சிறுமலையில் பட்டாம்பூச்சிகள் வகைகள் குறித்த ஆய்வு நடக்கவுள்ளது.

இதற்காக ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டாம் பூச்சிகள் அதிகம் இருந்தால் அந்த இடத்தில் மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அந்த இடம் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை கொண்டதுஎன அர்த்தம். எனவே உலக பட்டாம்பூச்சி மாதம் கொண்டாடும் இந்நேரத்தில் இவைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வு வேண்டும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here