லாபுவானில் ரிம18.83 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்! 66 வாகனங்களும் சிக்கின

லாபுவான், 

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை லாபுவான் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் வரி மற்றும் சுங்கத் தீர்வை உட்பட ரிம18.83 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில் கடத்தல் தொடர்பான 167 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லாபுவான் சுங்கத்துறை இயக்குநர் சைடின் ஜலாலுடின் தெரிவித்தார்.

வாகனங்கள், சிகரெட்டுகள், மதுபானங்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து ஐந்து சிறப்பு நடவடிக்கைகள் உட்பட மொத்தம் 12 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இதன் மூலம் 66 வாகனங்கள், 116,396 கிரெத்தேக் சிகரெட்டுகள், ஆறு மின்னியல் சிகரெட் சாதனங்கள், 1,454 கிலோகிராம் புகையிலை மற்றும் 187,518.92 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், லாபுவான் விமான நிலையத்தில் விரைவு அஞ்சல் பொதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கஞ்சா, கெத்தும் மற்றும் எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து சிறப்பு அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் மட்டும் ரிம4.96 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வரிவிலக்கு நிபந்தனைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் வாகனங்களே அதிக மதிப்பைக் கொண்டிருந்தன.

வாகனங்களைக் குறிவைத்து சபா மற்றும் சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சிறப்பு நடவடிக்கைகளில் ரிம4.85 மில்லியன் மதிப்பிலான 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சைடின் கூறினார்.

வரிவிலக்குத் தீவான லாபுவானிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை மீறி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடங்களில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலிப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனிடையே, லாபுவான் சுகாதாரத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் உரிய அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தல் நடவடிக்கைகள் நாட்டின் வருவாயைப் பாதிப்பதோடு, தேசியப் பாதுகாப்புக்கும் மக்களின் நலனுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக சைடின் குறிப்பிட்டார்.

கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும் பொதுமக்கள் 1-800-88-8855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலமாகவோ அருகிலுள்ள சுங்கத்துறை அலுவலகத்தின் மூலமாகவோ தகவல் வழங்கலாம். தகவல் வழங்குவோரின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here