தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும்

குடும்பத்தினரின் அன்பாலும் ஆதரவாலும் புற்றுநோயிலிருந்து மீண்டதாகக் கூறும் நெல்லையைச் சேர்ந்த பெண், எவ்வித அச்சமுமின்றித் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும் என்கிறார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இவர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்தப் பெண், கருப்பைப் புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்துக் கூறுகிறார்:

“கடந்த 2016 ஆம் ஆண்டு என் கருப்பையில் புற்றுநோய் இருப்பதை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கண்டறிந்து தெரிவித்தனர். முதலில், நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அதன் பின்னர், மருத்துவர்கள் எனக்கு தைரியம் அளித்தனர். பின்னர் 21 நாள்களுக்கு ஒரு முறை என 6 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

“முதல் கீமோதெரபி சிகிச்சை முடிந்த 3 ஆவது நாளிலிருந்து எனது தலைமுடி முற்றிலும் கொட்டிவிட்டது. சிகிச்சை முடிந்தவுடன் திரும்ப வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், இதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த சிகிச்சைக் காலங்களில், நமது உடல்நலத்தை மிகுந்த கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் என்னை நன்கு கவனித்துக்கொண்டனர்.

“சிகிச்சை முடிந்தவுடன், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு வருடங்களுக்குப் பின்னர், வருடத்திற்கு ஒருமுறை ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தற்போது நோய் முற்றிலும் குணமாகி நலமுடன் இருக்கிறேன்.

“சிகிச்சை காலத்தில் மட்டன் சூப், வெஜிடபிள் சூப் ஆகியவை பருகலாம். தினம் ஒரு நெல்லிக்கனி, பயறு வகைகள், பொரி கடலையுடன் கருப்பட்டி கலந்து சாப்பிடலாம். இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.

“பிராய்லர் கோழி சாப்பிடக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். வீட்டுச் சாப்பாடு, அதுவும் வடித்த சாதம் சாப்பிடலாம். கடையில் உள்ள உணவு எதையும் உண்ணாமல் இருப்பது நல்லது. குறிப்பாக இட்லி, தோசைகூட கடையில் சாப்பிடக் கூடாது. அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்தால் சரியாக 21 நாள்களுக்கு ஒருமுறை கீமோதெரபி சிகிச்சை எடுக்க உதவியாக இருக்கும். மேலும், 6 மாத கீமோதெரபி சிகிச்சை முடிந்த பின்னர், இந்த உணவுப் பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்கும்போது, கொட்டிய முடி திரும்பவும் அடர்த்தியாக வளரும்.

“ஒருவர் தனக்குப் புற்றுநோய்க்கான அறிகுறி தெளிவாகவே தென்படுகிறது என்றாலும், அதைத் தனது காலத்தின் இறுதிக் கட்டம் என்று நினைத்துக் கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள். கேன்சர் குறித்து பொதுமக்களிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.

“அதாவது, தன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு நோய் நம்மைப் பீடித்துவிட்டது எனப் பயந்து, இதுபற்றி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறனர். அவ்வாறு இல்லாமல், ஆரம்பநிலையிலேயே மருத்துவரை அணுகினால், நிச்சயம் இந்த நோயில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. இதற்காக சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம்கூட இல்லை” என்கிறார் இந்தப் பெண்மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here