திருட வந்ததை மறந்து மொட்டை மாடியில்….

மதுரவாயலில், வீட்டில் கொள்ளையடிக்க சென்ற வாலிபர், திருட வந்ததையே மறந்து, மொட்டை மாடியில் உறங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது மதுரவாயல் அடுத்த, அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், பிரபாகரன், 53.

நேற்று மாலை, இவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால், பிளம்பரை வீட்டுக்கு வரவழைத்து, வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றனர்.அங்கு, மர்ம நபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பிரபாகரன் யார் எனக் கேட்டதும், அந்த நபர், வீட்டின் மாடி படிக்கட்டு வழியாக, வேகமாக இறங்கி கீழே ஓடினார்.ஆனால், வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த நபரால் வெளியே செல்ல முடியவில்லை. இதையடுத்து, பிரபாகரன் மற்றும் பிளம்பர் சேர்ந்து, அந்த நபரை மடக்கிப் பிடித்து, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர், கொளத்துாரைச் சேர்ந்த முத்தழகன், 23, எனவும், ‘ஆன்லைன்’ வாயிலாக, உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்னை காரணமாக, திருட்டில் இறங்கியது தெரிய வந்தது.உணவு வினியோகம் செய்தபோது, பிரபாகரனின் வீடு தனியாக இருப்பதை கண்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார். இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு வந்த முத்தழகன், சுற்றுச்சுவர் ஏறி குதித்து, வீட்டின் மொட்டை மாடியில் ஏறியுள்ளார். அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட திட்டமிட்டார். ஆனால், கதவை உடைக்க முடியாததால், மது போதையில், மொட்டை மாடியில் துாங்கி உள்ளார்.

பொழுது விடிந்ததும், மேலிருந்து கீழே வர முடியாததால், மாடியிலேயே மாலை வரை, வெயிலில், உணவின்றி பதுங்கி இருந்தது தெரிய வந்தது.இந்தக் காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here