சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்

தனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது.

இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட மற்றும் அரசாங்க சேவைகளை பெற வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இது நாட்டின் மின்ணணு பொருளாதாரத்திற்கு “அடிப்படை தேவை” என்று சிங்கப்பூர் அரசாங்கத்தின் தொழில்நுட்ப முகமை கூறுகிறது.

சிங்கப்பூரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த தொழில்நுட்பம், தற்போது நாடுமுழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது ஒரு நபரை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் உண்மையிலேயே நிகழ்விடத்தில் இருக்கிறார் என்பதையும் உறுதி செய்கிறது.

“இதன் முக்கியத்துவம் என்னவென்றால், நீங்கள் ஒருவரது புகைப்படத்தையோ அல்லது காணொளியையோ அல்லது பதிவுசெய்யப்பட்ட உள்ளடக்கத்தையோ அல்லது போலியாக திரித்து உருவாக்கப்பட்ட பதிவையோ ஏற்றுக்கொள்ளாமல் குறிப்பிட்ட நபரின் இருப்பு இருந்தால் மட்டுமே அடையாளத்தை உறுதிசெய்வது இதன் தனித்துவம்” என்று கூறுகிறார் சிங்கப்பூருக்கு இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் ஐப்ரூவ் என்ற பிரிட்டனை சேர்ந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயலதிகாரியுமான ஆண்ட்ரூ பட்.

இந்த தொழில்நுட்பம் நாட்டின் மின்னணு அடையாளத் திட்டமான சிங்பாஸுடன் (SingPass) ஒருங்கிணைக்கப்பட்டு அரசாங்க சேவைகளை அணுக பயன்படுத்தப்படும்.

“தேசிய மின்னணு அடையாளத் திட்டத்தைப் பயன்படுத்தும் நபர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மேகக்கணி சார்ந்த முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது உலகளவில் இதுவே முதல் முறை” என்று ஆண்ட்ரூ மேலும் கூறினார்.

முகமறிதலா அல்லது முக அடையாள சரிபார்ப்பு?

முகமறிதல் (Facial recognition) மற்றும் முக அடையாள சரிபார்ப்பு (Facial verification) ஆகிய இரண்டுமே ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்வதையும், அவற்றின் அடையாளத்தை கண்டறிய ஏற்கனவே இருக்கும் தரவுத்தளத்தில் உள்ள படத்துடன் பொருத்துவதையும் சார்ந்துள்ளது.

இதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், சரிபார்ப்புக்கு பயனரின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு அவர்களின் திறன்பேசியை திறப்பது அல்லது அவர்களின் வங்கியின் திறன்பேசி செயலியில் புகுபதிகை செய்வது உள்ளிட்டவற்றிற்கான அணுகல் கிடைக்கிறது.

இதற்கு மாறாக, முகமறிதல் தொழில்நுட்பமானது, ஒரு ரயில் நிலையத்தில் உள்ள அனைவரது முகத்தையும் ஸ்கேன் செய்து, ஒரு குற்றவாளி ஒரு கேமராவை கடந்து செல்லும்போது அதிகாரிகளை எச்சரிக்கக்கூடும்.

“முகமறிதல் தொழில்நுட்பம் அனைத்து வகையான சமூக தாக்கங்களையும் கொண்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் தீங்கற்றது எனலாம்” என்று ஆண்ட்ரூ கூறுகிறார்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

அமெரிக்காவிலும் சீனாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

உதாரணமாக, குறிப்பிட்ட சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஃபேஸ் ஐடி, கூகுளின் ஃபேஸ் அன்லாக் மற்றும் சீனாவை சேர்ந்த அலிபாபாவின் ஸ்மைல் டூ பே உள்ளிட்ட முக அடையாள சரிபார்ப்பு சேவைகளை கொண்டு தங்களது திறன்பேசி செயலியில் புகுபதிகை உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கின்றன.

இதை தவிர்த்து, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஏற்கனவே முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவற்றில் வெகு சிலவே இந்த தொழில்நுட்பத்தை தங்களது தேசிய அடையாள எண்ணுடன் இணைப்பது குறித்து பரிசீலித்துள்ளன.

தேசிய அடையாள எண் அல்லது அட்டை என்ற பயன்பாடே இல்லாத சில நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசித்து வருகின்றன. உதாரணமாக, அமெரிக்காவை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் அரசு வழங்கும் ஓட்டுநர் உரிமத்தை பிரதான அடையாள அட்டையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சீனா தனது தேசிய அடையாள எண்ணுடன் முக அடையாள சரிபார்ப்பை இணைக்கவில்லை என்றாலும், அது கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் புதிய திறன்பேசிகளை வாங்கும்போது அவர்களின் முகங்களை ஸ்கேன் செய்யும்படி கட்டாயப்படுத்தும் விதிகளை இயற்றியது. இதன் மூலம், பகிரப்பட்ட தேசிய அடையாள எண்ணை கொண்டு குறிப்பிட்ட நபரின் அடையாளத்தை சரிபார்க்க முடியும்.

மற்றொருபுறம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் பயணிகளை முக அடையாள சரிபார்ப்பு முறையின் மூலம் உறுதிசெய்யும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம், தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகிய அரசுசார் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.

இது எப்படி பயன்படுத்தப்படும்?

சிங்கப்பூரின் முகமறிதல் தொழில்நுட்பமானது ஏற்கனவே நடமாடும் சேவை மையங்களிலும், அந்த நாட்டை சேர்ந்த டிபிஎஸ் என்ற வங்கியில் வாடிக்கையாளர்கள் இணையம் வழியே வங்கி கணக்கைத் திறக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட பிறகு, துறைமுகங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முக அடையாளத்தை சரிபார்க்கவும், உரிய மாணவர் தேர்வு எழுவதை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் தொழில்துறைகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

“இந்த மின்னணு முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு எங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கும் வரை அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் கட்டுப்படுத்தமாட்டோம்” என்று கோவ்டெக் சிங்கப்பூரின் தேசிய மின்னணு அடையாள பிரிவின் மூத்த இயக்குநர் குவோக் கியூக் சின் கூறினார்.

“தனிநபரின் சம்மதத்துடனும், விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது.”

தனியொரு உள்கட்டமைப்பை உருவாக்காமல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது வணிக நிறுவனங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று கோவ்டெக் சிங்கப்பூர் கருதுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் எந்த பயோமெட்ரிக் தரவையும் திரட்ட வேண்டிய அவசியமில்லை என்பதால் தனியுரிமைக்கு எவ்வித பிரச்சனையுமில்லை என்று குவோக் கியூக் மேலும் கூறினார்.

அதாவது, அரசின் தரவுத்தளத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் எடுத்துள்ள ஒரு நபரின் படம்/ காணொளி எந்தளவிற்கு பொருந்துகிறது என்பதற்கான மதிப்பெண் மட்டுமே பயன்பாட்டாளர்களுக்கு காட்டப்படும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here