இன்று சர்வதேச முதியோர் தினம்…

மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்று சர்வதேச முதியோர் தினத்தில் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

முதியோரின் நலன் காக்கவும்,அவர்கள் சேவையை அங்கீகரிக்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் முதியோருக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2019-20-ம் ஆண்டில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 736 முதியோர் பயனடைந்துள்ளனர். முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய 40 ஒருங்கிணைந்த வளாகங்கள் மூலம் 1,060முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசின் மானிய உதவியுடன் செயல்படும் 21 முதியோர் இல்லங்களில் 723 முதியோர் தங்கியுள்ளனர்.

ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின்கீழ் 59 முதியோர் இல்லங்கள், ஒரு தொடர் சிகிச்சை மையம், 4 நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் 2 பிசியோதெரபி கிளினிக் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.1கோடியே 65 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, முதல் தவணையாக 3 ஆயிரத்து 141 பேருக்கு நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காலத்தில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242 சமுதாய சமையற்கூடங்கள் மூலம் 78 ஆயிரத்து 937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தொலைபேசி வாயிலாக 4 ஆயிரத்து 942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

முதியோர் நலன்களுக்கான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருவதைப் பாராட்டிய மத்திய அரசு 2019-ம் ஆண்டுக்கான ‘வயோஸ்ரேஷ்தா சம்மன்’ விருதை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here