இந்தியா தொடர்ந்து முதலிடம்

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்தோர் சதவீதத்தில் உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.  இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் குணமடைவோரில் 21 சதவீதம் பேர் இந்தியார்கள். அதேபோல், உலகாளவிய மொத்த பாதிப்பில் 18.6 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.  அதேபோல், சர்வதேச அளவில் கொரோனா நோய் பாதிப்பின் காரணமாக குறைந்த இறப்புக்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி உலகளாவிய அளவில் கொரோனா இறப்பு சதவீதம் 2.97 ஆக உள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கையானது 1.56 சதவீதமாகும். பத்து லட்சம் பேரில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை சர்வதேச அளவில் 130 ஆக உள்ளது. இது, இந்தியாவில் 73 என்ற அளவிலேயே உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து 54,27,706 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 75,628 பேர் குணமடைந்து இருக்கின்றனர்.  குணமடைந்தோர் சதவீதமானது 83.84 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் 74.36 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 மாநிலங்களில் 77% நோயாளிகள்

நாடு முழுவதும் 9,44,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 12வது நாளாக தொடர்ந்து 10 லட்சத்துக்கும் குறைவான நபர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 77 சதவீதம் பேர் 10 மாநிலங்களில் உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

65 லட்சம் பேர் பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கபட்டோர் எண்ணிக்கை, நேற்று காலை 8 மணி நிலவரப்படி 64,73,544 ஆக இருந்தது. நேற்றிரவு இது 65 லட்சத்தை கடந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் நோய் தொற்றின் காரணமாக புதிதாக 79,476 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் நோய் பாதித்த 1,069 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 842ஆக அதிகரித்துள்ளது.

7.78 கோடி பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் இதுவரையில் 7 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 11 லட்சத்து 32 ஆயிரத்து 675 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here