பிரான்ஸ், இத்தாலியை புரட்டி போட்ட ‘அலெக்ஸ்’ புயல்

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரம் இந்தப் புயல் மற்றும் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்குள்ள ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. நைஸ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. புயல் மற்றும் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் மாயமாகி உள்ளனர். இதேபோல் இத்தாலியின் வட மேற்குப் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கு மற்றும் பீட்மாண்ட் பிராந்தியத்தில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 17 பேர் மாயமாகி உள்ளனர். இரு நாடுகளிலும் புயல் மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here