ஆபத்து விளைவிக்கும் 7 ரசாயனத்துக்கு தடை

ஆபத்தை விளைவிக்கும் 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டம் முடிந்ததும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், ‘‘ஸ்டால்க்ஹோம் மாநாட்டில் 7 ஆபத்தான ரசாயனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த  அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 ரசாயனங்களும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதால் தடை விதிக்கப்பட்டவை. சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது,’’ என்றார்.தடை செய்யப்பட்டுள்ள 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்துவதால், கேன்சர், உறுப்புகள் செயலிழப்பு, நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, இயற்கை எரிவாயு சந்தைபடுத்துதல் சீர்த்திருத்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here