அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் மிகப் பெரிய கவுரமாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் கிடைக்கும் என்பதுதான் மிகப் பெரிய விவாதப் பொருளாக உள்ளது.ஐரோப்பிய நாடான நார்வேயைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்பட ஆறு துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.நோபலின் பிறந்த நாளான டிச. 10ம் தேதி இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளைப் பெற உள்ளோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவரின் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 211 தனிநபர்கள், 107 அமைப்புகள் என 318 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு ‘கொரோனா’ வைரஸ் பரவல், பல நாடுகளில் ராணுவ மோதல், சுற்றுச்சூழல் பிரச்னை என முக்கிய பிரச்னைகளை சந்தித்துள்ள நிலையில் அமைதிக்கான நோபல் விருது இந்தப் பிரச்னைகள் தொடர்பான ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருவநிலை மாறுபாடு பிரச்னையை கையில் எடுத்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பர்க் முன்னிலையில் உள்ளார். விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டு அதில் இருந்த மீண்ட ரஷ்ய அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தியாளர் அலெக்சி நவல்னியும் பட்டியலில் உள்ளார். உலக சுகாதார அமைப்பு 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐ.நா.

அமைப்பு போன்றவையும் பரிசீலனையில் உள்ளன.பரிந்துரைகள் அளிக்க இந்தாண்டு பிப். 1ம் தேதி கடைசி நாள் என்பதால் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமைதிக்கான நோபல் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.இந்தப் பரிந்துரைப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இடம்பெற்றுள்ளார். ஆனால் பருவநிலை மாறுபாடு தொடர்பான ஒப்பந்தம் உள்பட பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறியதால் அவருக்கு விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வரும் சி.பி.ஜே. எனப்படும் பத்திரிகையாளர் பாதுகாப்பு கமிட்டி எல்லைகள் இல்லாத பத்திரிகையாளர்கள் அமைப்பு போன்றவையும் பட்டியலில் உள்ளன. சீனாவில் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் இதாம் தோடியும் பட்டியலில் உள்ளார். அரசுக்கு எதிராக செயல்பட்டதாக 2014ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர்களில் யாரை தேர்வுக் குழு தேர்ந்தெடுக்க உள்ளது என்ற ஆர்வம் உலகெங்கும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here