தான் நடிக்கும் எழுமின் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியதற்காக நகைச்சுவை நடிகர் விவேக் உணர்வுப்பூர்வமுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக சிலம்பாட்டத்தை வைத்து உருவாகியுள்ள, இப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள். தற்காப்பு கலையில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை முன்னேற்றும் முதன்மை வேடத்தில் விவேக் நடித்திருக்கிறார்.
கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘எழடா எழடா’ என்ற பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே, ‘ஒய் திஸ் கொலவெறி, அம்மா அம்மா, நோ ப்ராப்ளம், பூ இன்று நீயாக, ஒத்த சொல்லால, டானு டானு டானு, ரெளடி பேபி’ என தனுஷ் பாடிய பல்வேறு பாடல்கள் வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, எழுமின் பாடல் ஹிட் ஆகியிருந்தாலும், நடிகர் விவேக், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “என்மேல் கொண்ட அன்புக்காக எனக்கு இந்தப் பாடலை உணர்வுப்பூர்வமாக பாடிக்கொடுத்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றி என்றென்றும் உரியது” என்று தெரிவித்திருக்கிறார்.