சீனாவில், இரண்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதனால், கிங்டாவோ நகரில் வசிக்கும் ஒன்பது லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் பிறப்பிடமான நாடான சீனாவில், 85 ஆயிரத்து, 578 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,634 பேர் இறந்தனர்.அதன்பின், அரசின் தீவிர நடவடிக்கைகளால், கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது. ஆகஸ்டில், ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில், நான்கு பேரிடம் பாதிப்பு உறுதியானது.
அதனை தொடர்ந்து, பிற நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் மட்டுமே, கொரோனா கண்டறியப்பட்டது.இதனால், கடந்த இரு மாதங்களாக நாட்டில் தொற்று பரவல் இல்லை என, அறிவிக்கப்பட்டதுடன், வணிக நிறுவனங்களுக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்பட்டன.இந்நிலையில், கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எட்டு நோயாளிகள் உட்பட ஒன்பது பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதிய தொற்றுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.மேலும், கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், ஐந்து நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என, சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.