கொரோனவால் இந்தியாவில் OTT தளங்களில் வெளியாகும் படங்கள் அதிகரித்துவிட்டன. என்னதான் ஓ.டி.டி தளங்களுக்கு கோடியில் படம் விற்கப்பட்டாலும், அடுத்த அரைமணிநேரத்தில் திருட்டு தளங்களில் வந்துவிடுகிறது. பிறகு ஏன் ஓ.டி.டி நிறுவனங்கள் அவ்வளவு கோடி கொடுத்து வாங்குகிறார்கள்? எப்படி லாபம் பார்ப்பார்கள்? என்ற சந்தேகம் பல நாளாக உள்ளது. தியேட்டரில் வெளியானாலே சில கூட்டம் திருட்டு தனமாக இணையத்தில் வெளிவிட்டு விடுகிறது. ஆனால் இப்போது ஆன்லைன் தளமான ஓ.டி.டியில் வெளியானால் சும்மா இருப்பார்களா? முன்னராவது தியேட்டரில் பார்க்கும் அனுபவத்திற்காக ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டருக்கு போவார்கள். இப்போது அந்த அனுபவமும் இல்லை, அதனாலே திருட்டு தளத்தை அணுகுவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
சில மக்கள், இந்த சேவை மலிவு விலையில் இருப்பதால் ஓ.டி.டியில் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் ஏன் தெரியுமா? என்னதான் திருட்டு தளங்களில் புதுப்படங்கள் கிடைத்தாலும், சில பழைய படங்களை தேடும் போது, எளிதாக சிக்குவதில்லை. தேடும் நேரத்திலே நமது ஓய்வு நேரம் எல்லாம் செலவாகிவிடும். அதனாலே பலர் ஓ.டி.டி தளங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதன் வருடாந்தர சந்தாவும் ஆயிரத்தில் தான் உள்ளது. இத்துறையில் உள்ள அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களும் மக்களின் ஆதரவை பெற குறைவான விலையில் சேவை வழங்கி வருகிறது. அமேசான் ப்ரைம் பொறுத்தவரையில் சில விநியோக விருப்பங்களும் இருக்கும். இதனால் மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை காட்டிலும் அமேசானில் ஷாப்பிங் செய்ய மக்களை தூண்டலாம்.
OTT-யால் பல லாபங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக இந்த கொரோனோவால் அவர்களது காட்டில் மழைதான். பணம் படைத்தவர்களும், திருட்டு இணையத்தில் போதிய சேவை கிட்டாதவர்களும் ஓ.டி.டி தளத்தை விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்த ட்ரெண்ட் எங்கெல்லாம் செல்ல போகிறதோ ?