99 வயதிலும் ஓட்டல் நடத்தி அசத்துகிறார்!

நல்ல விஷயங்களும், நல்ல மனிதர்களும் தோற்றதாக சரித்திரம் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார், 99 வயது கவுசல்யா பாட்டி.சென்னை, நங்கநல்லுார், 45வது தெரு முனையில், தள்ளு வண்டியில், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் உணவகத்தில், உணவருந்த காத்திருக்கும் கூட்டத்திற்கு இடையில், ஆட்டோவில் வந்திறங்கும், கவுசல்யா பாட்டியே, இந்த கட்டுரையின் நாயகி.

மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரின் முன்னோர்களும், சமையல் கலையில் கைநேர்த்தி மிக்கவர்களாக இருந்ததால், அந்த பக்குவம், பாட்டிக்கும் ஒட்டிக் கொண்டது என்றே சொல்லலாம்.ஆட்டோவில் இருந்து, கவுசல்யா பாட்டி இறங்கும்போதே, அவர் எடுத்து வந்த இட்லி, பூரி, பொங்கல், கிச்சடி, வடை உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்களும், வரிசைகட்டி இறங்குகின்றன.

சுட சுட உணவுஐந்து நிமிடங்களில், அனைத்தும், அந்த தள்ளு வண்டிக்கு மாறுகின்றன. சற்று நேரத்தில், சுடச்சுட சுவையுடன் தயாரான, காலை உணவை ருசி பார்க்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கவுசல்யாவின் மேற்பார்வையில், அவரது மகள் கமலாவும், மகன் கிருஷ்ணமூர்த்தியும் பரிமாறுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் பலரை, அவர்களின் பெயர் கூறி, அன்புடன் அழைத்து, கனிவோடு, ‘நல்லா சாப்பிடுப்பா!’ எனச் சொல்லும் போது, சிலருக்கு தாயாக தெரிகிறார் கவுசல்யா.வயது, 99 ஆனா லும், அதிகாலை, 3:௦௦ மணிக்கு எழுந்து, மகள், மகனுடன் சேர்ந்து, மூன்று மணி நேரத்தில், உணவுகளை தயார் செய்வது முதல், வாடிக்கையாளர்களும் விரும்பும் உணவை, தெளிவான பார்வையுடன், நிதானமாக வழங்கி, 12:௦௦ மணிக்குள் கடையை மூடி, வீட்டிற்கு புறப்படுகிறார்.

வீட்டிற்கு சென்றதும், மகள், மகன் ஓய்வு எடுக்கும் நேரத்தில், அவர்களுக்கு மதிய உணவு தயார் செய்துவிட்டு, மறுநாளுக்கு உண்டான வேலைகளை பார்க்க ஓடோடுகிறார்.வேலையில் சிட்டாய் பறந்தாலும், ‘டிவி’ யில், ரஜினி படம் ஓடும் சப்தத்தை கேட்டால், உலகை மறந்து, படத்தை பார்க்க உட்காரும் பாட்டிக்கு, ஓட்டல் தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை.

பலரை திருப்திப்படுத்துவதுடன், தங்கள் மனதையும் திருப்திப்படுத்துவதாக இருப்பதாலேயே, இந்த தொழிலை செய்கிறோம் எனக் கூறுகிறார், கவுசல்யாவின் மகள் கமலா. ஆசை கொரோனாவால், ௨௦ நாட்கள், ஓட்டல் திறக்க முடியாமல் போனது, பண அளவில் இல்லை என்றாலும், மனதளவில் தங்களை பாதித்தாக கூறும் அவர், உதவி கிடைத்தால், சிறிதாக ஓட்டல் துவங்கி, பாரம்பரிய பட்சணங்கள் செய்து, விற்க வேண்டும் என்பதே, தங்கள் ஆசை எனக் கூறுகிறார்.’உழைக்காமல் ஒரு நாளும், உண்ண வேண்டாம்’ என, உழைப்பின் திலகமாக திகழும், கவுசல்யா, சதமடிப்பதற்குள், கமலா மாமியின் கனவுகள் நிறைவேறட்டும்.இவர்களுக்கு, உதவ விரும்புவோர், 73387 16104 என்ற எண்ணில் அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here