திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையை நடத்தியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர்.
இந்த கும்பலிடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் 17 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, திருவாரூர் முருகன், தினகரன், கோபால், ரகு உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.