எல்லை பகுதி கண்காணிப்புக்கு பிரத்யேக படை உருவாகிறது

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை கண்காணிப்பதற்காக, பிரத்யேகமான முப்படை பிரிவு உட்பட, ஐந்து படைப் பிரிவினை, 2022ல் உருவாக்க, நம் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் ராணுவத்தில், வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட, ஏழு படைப் பிரிவுகளும், விமானப் படையில் ஆறு பிரிவுகளும், கப்பல் படையில் மூன்று பிரிவுகளும் உள்ளன.

இந்நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக, முப்படைகளையும் ஒரு தளபதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிணைக்கும் படைப் பிரிவுகள், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளன.பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பில் ஒருங்கிணைந்து செயல்படவும், எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்த நடைமுறை பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நம் முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படும் வகையிலான ஐந்து படைப் பிரிவுகளை உருவாக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளது.அதில், லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான சீன எல்லைப் பகுதிகளை கண்காணிக்க, பிரத்யேகமாக வடக்கு படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. இதேபோல், சியாச்சின் சிகரத்தில் இருந்து, குஜராத் வரையிலான, பாக்., எல்லைப் பகுதிகளை கண்காணிக்க, பிரத்யேக மேற்கு படைப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

இவை, உ.பி.,யின் லக்னோ மற்றும், ராஜஸ்தானின் ஜெய்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக வைத்து செயல்பட உள்ளது.தெற்கு எல்லை பகுதியை கண்காணிக்கும் வகையில், மூன்றாவது படைப்பிரிவு, கேரளாவின் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும்.நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள், முற்றிலும், விமானம் மற்றும் கடல் படைப் பிரிவுகளாக செயல்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here