கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்

இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்கும் சலுகையை அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஆறு மாதங்களுக்கு, கடனுக்கான வட்டி மட்டுமே, கடன்தாரர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

அந்த ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாத வட்டிக்கான வட்டி, மத்திய அரசு சார்பில், கடன்தாரர்களின் கணக்கில் செலுத்தப்படும்.இதன்படி, இரண்டு கோடி ரூபாய் வரை, பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்ற அனைவரின் கணக்கில், சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகை செலுத்தப்படுவதை, நவ.,5க்குள் உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வட்டி மானியம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தாண்டு, பிப்.,29 நிலவரப்படி உள்ள கடன் நிலுவை அடிப்படையில், வட்டி மானியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், பிப்.,29 முதல் ஆக.,31 வரையிலான காலத்தில் கடன் தவணை செலுத்தாதோருக்கு, வட்டி மற்றும் அதற்கான கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு, வித்தியாசத் தொகை, கணக்கில் வரவு வைக்கப்படும்.மத்திய அரசின் கடன் தவணை சலுகையை பயன்படுத்தாமல், தொடர்ந்து வட்டி செலுத்தியவர்களுக்கும், இந்த வித்தியாசத் தொகை வரவு வைக்கப்படும் என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வட்டி மானியச் செலவு, 6,500 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here