அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொடூரத் தாக்குதல்: உதவி கோரிக் கெஞ்சும் காணொளியால் அதிர்ச்சி

சிக்காகோ:

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் முதுகலை படித்துவரும் இந்திய மாணவரான சையட் மசாகிர் அலி, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் உதவி கோரும் காணொளி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாக்கப்பட்டவரைச் சந்திக்க அவசர விசா வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், ஹைதராபாத்தில் உள்ள மாணவரின் குடும்பத்தினர்.

இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சையட் மசாகிர் அலி, தனது மூக்கு மற்றும் வாயில் இரத்தம் ஒழுக உதவி கோரும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலைக் காட்டும் சிசிடிவி காணொளியில் சையதை சிக்காகோவிலுள்ள அவரது வீட்டருகில் மூன்று பேர் தாக்குவதாக உள்ளது.

இரத்தம் ஒழுக அவர் உதவிக்குக் கெஞ்சும் காணொளியில், “நான் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நான்கு பேர் என்னைத் தாக்கினர். என் வீட்டுக்கு அருகே நான் தடுமாறி விழுந்தேன். அவர்கள் என்னை உதைத்தார்கள். தயவுசெய்து உதவுங்கள்,” எனக் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியால் இந்தியாவில் உள்ள அவருடைய குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். சையட்டுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், அவரைச் சந்திக்க அமெரிக்கா செல்ல உதவவும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா செல்ல உதவுமாறு சையட்டின் மனைவி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இவ்வாண்டு இதுவரை ஐந்து இந்திய வம்சாவளி மாணவர்கள் இறந்துவிட்டனர்.

இண்டியானா புர்துவே பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சமீர் கமாத், நிச்சஸ் டிரஸ் பகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதியன்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க கடப்பிதழ் வைத்திருந்த 19 வயது இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய மாணவரான நீல் ஆச்சாரியாவின் சடலம், பர்டூ பல்கலைக்கழக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் காணவில்லை என்றும் கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் மாணவரின் தாயார் வேண்டுகோள் விடுத்த மறுநாள் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடற்ற ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதே மாதம், இல்லினோய் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றோர் இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார்.

இவ்வாறு தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் போக்கு மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கவலை அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here